பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகளின் பேரணி இம்ரான் கான் அரசாங்கத்தை அதிரவைத்துள்ளது. நேற்று பலுசிஸ்தானில் நடைபெற்ற பேரணியால் இம்ரான் கான் அரசாங்கத்திற்கு மேலும் தலைவலி ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஆளும் இம்ரான் கான் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போர்க்கொடி தூக்கியுள்ளனர். மோசமான பொருளாதார கொள்கை, வேலைவாய்ப்பின்மை, சீனாவுக்கு அடிபணிந்து செல்லுதல், மேலும் நீண்ட நாட்களாக நட்பு நாடாக இருந்த சவுதியையும் பகைத்து கொண்டதால் இப்போது சவூதி அரசாங்கமும் பாகிஸ்தானுக்கான கடன் வழங்குவதை நிறுத்திவிட்டது. சீனாவுடனான நெருக்கம் காரணமாக அமெரிக்காவும் கைவிட்டு விட்டது. இப்படி பல சர்ச்சைகள் மற்றும் சிக்கல்களால் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான அலை அங்கு எழுந்துள்ளது.
Also Read: நைஜீரியாவில் கொழுந்துவிட்டு எரியும் மக்கள் போராட்டம்.. என்ன நடந்தது ? முழு தகவல்
இதனால் 11 எதிர்க்கட்சிகள் சேர்ந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் எனும் அமைப்பை உருவாக்கி இம்ரான் கான் அரசுக்கு எதிராக பேரணி செல்ல திட்டமிட்டனர். இந்த பேரணியை பல கட்டங்களாக நடத்தவும், இறுதியாக இம்ரான் கான் பதவி விலக்கக்கோரி முற்றுகை போராட்டம் நடத்தவும் திட்டமிட்டனர். இந்த நிலையில் ஏற்கனவே கராச்சி மற்றும் குஜ்ரன்வலாவில் இரண்டு பேரணிகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து நேற்று பலுச்சிஸ்தான் மாகாணத்தில் இருக்கும் குவெட்டா நகரில் மூன்றாவது எதிர்க்கட்சிகளின் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் தலைவர் மவுலானா ஃபஸலூர் ரஹ்மான், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் துணை தலைவர் மர்யம் நவாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது மர்யம் நவாஸ் பேசுகையில் பாகிஸ்தான் மற்றும் பலூசிஸ்தான் மக்களின் தலைவிதியை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனி யாருடைய சகோதரர்களும், கணவன்மார்களும் பலுசிஸ்தான் பகுதியில் இருந்து காணாமல் போகமாட்டார்கள் என்றார்.மேலும் பாகிஸ்தான் நிறுவனர் முகம்மது அலி ஜின்னா, நாட்டின் கொள்கை வகுத்தல் என்பது பொதுமக்களின் வேலை, மாநிலத்தின் சேவை அதிகாரிகளுக்கு அவர்களின் உறுதிமொழிகளைக் கடைப்பிடிக்குமாறு கூறியதாக அவருடைய ஒரு வசனத்தையும் மேற்கோள் காட்டினார் .
இந்த பேரணி குறித்து கருத்து கூறியுள்ள பாகிஸ்தானின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஷிபிலி ஃபராஸ், இந்த பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் நிலைப்பாடு என்பது பாகிஸ்தான் எதிரிகளின் பிம்பத்தை பிரதிபலிக்கிறது என்றார். நேற்றைய போராட்டம் பற்றி கூறுகையில் குண்டர்கள் குவெட்டாவில் தங்கள் முகாமை அமைத்துள்ளனர் அவ்வளவுதான். அந்த பேரணியில் உரையாற்றிய பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரிப் நீதிமன்றத்தால் தப்பியோடியவர் என்று அறிவிக்கப்பட்டவர். மேலும் சுதந்திர பலுசிஸ்தான் கோரிக்கைக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் பேசும் நவாஸ் ஷெரிப் மற்றும் பிற கட்சியினர் மீதும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.