Saturday, March 25, 2023
Homeசெய்திகள்உலகம்சவுதிக்கு சென்ற ராணுவ தளபதி.. உலக அரசியலில் ஏற்படும் மாற்றம்.. புதிய கூட்டணி உருவாகுமா?

சவுதிக்கு சென்ற ராணுவ தளபதி.. உலக அரசியலில் ஏற்படும் மாற்றம்.. புதிய கூட்டணி உருவாகுமா?

ரியாத்: இந்திய ராணுவ தலைமை ஜெனரல் நரவனேவின் சவுதி அரேபிய பயணம் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்தும் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக பார்க்கப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா ஆகிய வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராணுவ ஜெனரல் நரவனே தன்னுடைய பயணத்தின் இரண்டாம் கட்டமாக சவுதி அரேபியா சென்று சேர்ந்தார். ராணுவ உறவை பலப்படுத்துவதற்காக இந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய ராணுவ தளபதி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா சமீப நாட்காளாக தன்னுடைய ராஜாங்க மற்றும் ராணுவ உறவை பலப்படுத்தி வருகிறது. சீனாவுடன் எல்லையில் மோதல் இருக்கும் நிலையில் அதற்கு பதில் நடவடிக்கையாக பல்வேறு நட்பு நாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இந்தியா தீவிரமாக இறங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் பஹ்ரைன் மற்றும் அமீரகத்துக்கு பயணம் மேற்கொண்டு உயர்மட்ட தலைவர்களை சந்தித்தார்.

கடந்த மாதம், இந்திய இராணுவத் தலைவர் நேபாளத்திற்கு மூன்று நாள் பயணத்தில் பயணம் செய்தார். இது இந்தியா – நேபாள் இருதரப்பு உறவில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல அக்டோபரில், ராணுவ ஜெனரல் நாரவனே மற்றும் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் மியான்மருக்கு மிகவும் முக்கியமான பயணம் மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக மியான்மர் கடற்படைக்கு தாக்குதல் நீர்மூழ்கி கப்பலை வழங்க இந்தியா முடிவெடுத்துள்ளது. மேலும் இராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்தியாவின் இந்த தொடர் நடவடிக்கையின் அடுத்தகட்டமாக வளைகுடா நாடுகளையும் இணைக்கும் படி, ராணுவ தளபதி நரவனே அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டார். இந்திய ராணுவ தளபதியின் சவுதி வருகை இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று இந்திய ராணுவம் டிவிட்டரில் கூறியுள்ளது.

இந்த பயணத்தின் முதல் நாளில், ஜெனரல் நரவனே சவுதி தளபதிகளை சந்தித்தார், இதில் ராயல் சவுதி ராணுவ படைகளின் தளபதி ஜெனரல் ஃபஹத் பின் அப்துல்லா முகமது அல்-முதிர், பொதுப் பணியாளர் தலைவர் ஜெனரல் ஃபயாத் பின் ஹமீத் அல் ருவாய்லி மற்றும் கூட்டுப் படைகளின் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் முட்லக் பின் சலீம் ஆகியோரை சந்தித்து இரு நாட்டுக்கும் இடையேயான பொதுவான விருப்பம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் நாள், கிங் அப்துல் அஜீஸ் இராணுவ அகாடமியை பார்வையிட்டார் மற்றும் இராணுவ பயிற்சி குறித்த கருத்துக்களையும் பரிமாறிக்கொண்டார். மேலும் சவுதி ஆயுதப்படை கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரி மற்றும் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தையும் பார்வையிட்டார், அங்கு அவர் போர் பாடநெறியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர் அதிகாரிகளிடம் உரையாற்றினார் என்று இந்திய ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நரவனேவின் இந்த பயணம் இரண்டு முக்கிய வளைகுடா நாடுகளுடன் இந்தியாவின் வளர்ந்து வரும் மூலோபாய உறவுகளின் பிரதிபலிப்பாகக் கருதப்படுகிறது, மேலும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை மேலும் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும், பாகிஸ்தானை சவுதி அரேபியா மொத்தமாக புறக்கணிக்க தொடங்கியுள்ள நிலையில் பாகிஸ்தானின் ராணுவ தளபதியை சந்திப்பதற்கு கூட சவுதி மன்னர் மறுத்துவிட்டார், மேலும் பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த கடனையும் சவுதி நிறுத்திவிட்டது. இதனால் கிட்டத்தட்ட மொத்தமாக சவுதி – பாகிஸ்தான் உறவு முறியும் நிலை ஏற்பட்டுள்ள இந்த சூழலிலும் இந்திய ராணுவ தளபதியின் இந்த பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

மறுபக்கம் ஈரானின் அணு ஆயுத விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டுள்ளதால் கடும் கோபத்தில் இருக்கும் ஈரான், இந்த கொலை குறித்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மீது குற்றம் சாட்டியுள்ளது. இப்படியான நிலையில் இஸ்ரேலுடன் மற்ற அரபு நாடுகள் தூதரக உறவுகளை மேற்கொள்வது மத்திய கிழக்கில் ஈரானை தனித்துவிடப்படும்.

அதே போல இந்தியாவும் சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளுடன் ராஜாங்க மற்றும் ராணுவ ரீதியாக நெருக்கமாவது பாகிஸ்தானை தனிமைப்படுத்த வாய்ப்புள்ளது. ஏற்கனவே சீனாவுடன் நெருங்கிய உறவில் இருக்கும் இந்த இரண்டு நாடுகளும் உலக அரசியலில் புதிய கூட்டணியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதன்படி அமெரிக்கா-இஸ்ரேல்-அரபு நாடுகள் -இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஓரணியாகவும், ஈரான்-பாகிஸ்தான் – சீனா ஆகிய நாடுகள் மற்றொரு அணியாகவும் திரள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.