பாகிஸ்தானிடம் இருக்கும், அகோஸ்டா நீர்மூழ்கி கப்பல், மிராஜ் ரக போர் விமானங்களை தரம் உயர்த்தி கொடுக்க போவதில்லை என்றும் பிரான்ஸ் அதிரடியாக கூறியுள்ளது. பள்ளி ஆசிரியர் ஒருவர் கொள்ளப்பட்டது தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விமர்சனம் செய்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கத்தார் நாட்டிடமும் ரபேல் விமானங்களை பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த யாரையும் இயக்க அனுமதிக்க கூடாது என்றும் பிரான்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது. ஏனெனில் அவ்வாறு அவர்கள் அனுமதிக்கப்படும் பட்சத்தில் ரபேல் விமானங்களின் தொழில்நுட்பம் குறித்து பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
பாரிஸில் சர்ச்சைக்குரிய சார்லி ஹெப்டோ பத்திரிகையின் முன்னாள் அலுவலகத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த இருவர் மீது கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் இருந்து புலம் பெயர்ந்த அலி ஹசன் என்பவர் தாக்குதல் நடத்தினார். அதன் பிறகு பாகிஸ்தானிலிருந்து வரும் புகலிடம் கோரிக்கைகளை விரிவான ஆய்வுக்கு உட்படுத்த பிரான்ஸ் முடிவெடுத்துள்ளது. சார்லி ஹெப்டோ பத்திரிகை அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டது கூட தெரியாமல் அவர் இந்த தாக்குதலை மேற்கொண்டு இருந்தார். இந்த தாக்குதல் குறித்து கருத்து கூறியிருந்த பாகிஸ்தானில் தங்கியிருக்கும் அலி ஹசனின் தந்தை தன்னுடைய மகன் ஒரு பெரிய வேலையை செய்துள்ளார் என்றும், தாக்குதல் குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இதற்கிடையே பிரான்ஸ் அதிபர் மீது பல இஸ்லாமிய நாடுகள் விமர்சனங்களை வைத்து வந்த போது இந்தியா பிரான்சுக்கு ஆதரவாக நின்றது. அந்த சமயத்தில் இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ வர்தன் பிரான்ஸ் சென்ற போதே பாகிஸ்தானுக்கு எதிரான பிரான்ஸ் அரசாங்கத்தின் முடிவுகள் குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது. பிரான்ஸ் தன்னுடைய கூட்டணி நாடுகளின் பாதுகாப்பு குறித்து கவலை கொள்வதாகவும் அதன் காரணமாகவே பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர்களை ரபேல் விமானங்களை இயக்க அனுமதிக்கவில்லை என்றும் கூறியுள்ளது. இந்தியா பிரான்சிடம் இருந்து சமீபத்தில் ரபேல் விமானங்களை வங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மிராஜ் ரக போர் விமானங்கள்
பாகிஸ்தான் நீண்ட காலமாக மிராஜ் ரக போர் விமானங்களை வாங்கி வருகிறது. இந்த நிலையில் நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள போர் விமானங்களை மேம்படுத்தி தொடர்ந்து அவற்றை பயன்படுத்தும் பொருட்டு பாகிஸ்தான் பிரான்சிடம் கோரிக்கை வைத்துள்ளது, ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக பிரஞ்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மிராஜ் III மற்றும் மிராஜ் 5 போன்ற போர் விமானங்களை அப்டேட் செய்துகொடுக்க முடியாது என்ற பிரான்ஸ் அரசாங்கத்தின் முடிவு, பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த சுமார் 150 மிராஜ் போர் விமானங்களைக் கொண்ட பாகிஸ்தான் விமானப்படையை கடுமையாக பாதிக்கும். மேலும் அகோஸ்டா 90 பி வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களை மேம்படுத்த கோரிய பாகிஸ்தானின் மூன்றாவது கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸை தொடர்ந்து ஜெர்மனியும் பாகிஸ்தானின் நீர்மூழ்கி கப்பல்களை மேம்படுத்துவதற்கான கருவிகளை வழங்க மறுத்துவிட்டது. 2017 ஆம் ஆண்டு மே மதம் காபூலில் இருக்கும் ஜெர்மன் தூதரகத்தில் நடைபெற்ற லாரி குண்டு வெடிப்பு தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டறிய பாகிஸ்தான் அரசாங்கம் ஒத்துழைக்க மறுத்துவிட்டதாக கூறி ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மார்கெல் பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.