வாஷிங்டன் : கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசிக்கு அமெரிக்க அரசு அதிகாரபூர்வமாக அனுமதி வழங்கியவுடன், மக்களிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அவற்றை தொலைக்காட்சிகளில் எல்லோர் முன்னிலையிலும் போட்டுக்கொள்ள தயார் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் பாரக் ஒபாமா, பில் கிளிண்டன், மற்றும் ஜார்ஜ் புஷ் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவின் மாடெர்னா, ஃபைசர் நிறுவனங்களின் பரிசோதனை மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பரிசோதனைகளும் 90 சதவிகிதத்திற்கு மேல் வெற்றிபெற்றுள்ளதாக அறிவித்துள்ளன. எப்போது வேண்டுமானாலும் இந்த நிறுவனங்களின் தடுப்பு மருந்து பொது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு இப்போதே பிரிட்டன் அதிகாரபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கிய முதல் நாடாக மாறியுள்ளது.
தடுப்பூசிகளுக்கு எதிரான பிரச்சாரம்:
ஒருபக்கம் தடுப்பூசிக்கான வரவை மக்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் நிலையில் மறுபக்கம் தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வகை தடுப்பூசி ஆபத்தானவை, தேவையற்றவை, பன்னாட்டு நிறுவனங்களின் வியாபாரம் என்றெல்லாம் தேவையில்லாத பிரச்சாரங்கள் உலகம் முழுவதிலும் பல்வேறு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களும், பிரபலமானவர்களுமே இதில் ஈடுபட்டு வருவது அதிரிச்சியளிக்கும் வகையில் உள்ளது. பிரேசில் அதிபர் போல்சோனாரோ சமீபத்தில் தான் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேன் என அறிவித்து இருந்தார். இந்த நிலையில் இன்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வாட்ஸ் அப்பில் வலம் வரக்கூடிய ஒரு தகவலை டிவிட்டரில் போட்டு நாம் தடுப்பூசி போட்டுக்கொள்ள தான் வேண்டுமா என்றும் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி முக்கிய பொறுப்பில் இருப்பவர்களே தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பொழுது சாதாரண மக்களுக்கும் தடுப்பூசி மீதான அச்சம் ஏற்பட்டு அவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பு தெரிவிக்க நிறைய வாய்ப்புள்ளது. இது கொரோனா எனும் கொடிய வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மேலும் பின்னடைவை கொடுக்க வாய்ப்புள்ளது. இதனால் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல தரப்பினரும் முன் வந்துள்ளனர். அந்த வகையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் பாரக் ஒபாமா, பில் கிளிண்டன் மற்றும் ஜார்ஜ் புஷ் ஆகியோர் அமெரிக்காவின் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஏதாவது ஒரு தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியவுடன் மக்கள் முன்னிலையில் அதை போட்டுகொண்டு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.
களமிறங்கிய முன்னாள் அதிபர்கள்:
கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வில் தன்னால் எவ்வாறு உதவ முடியும் என்பது தொடர்பாக ஜார்ஜ் புஷ், தொற்று நோய்களுக்கான நிறுவனத்தின் இயக்குநரும் நாட்டின் உயர்மட்ட தொற்று நோய் நிபுணருமான டாக்டர் அந்தோனி ஃபாசி மற்றும் வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டெபோரா பிர்க்ஸ் ஆகியோரை அணுகியதாக புஷ்ஷின் தலைமை அலுவலர் தெரிவித்தார். நாட்டின் குடிமக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்குவிக்க தன்னால் முடிந்ததை அவர் செய்ய நினைக்கிறார். மேலும் தடுப்பூசி கிடைக்கப்பெற்றவுடன் முன்னுரிமை உள்ளவர்களுக்கே முதலில் வழங்க வேண்டும் என்றும் பின்னர் அவருடைய பெயர் பட்டியலில் வரும் பொழுது அவற்றை கேமரா முன்பு தொலைக்காட்சிகளில் போட்டுகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் பில் கிளின்டனின் பத்திரிகை செயலாளர் கூறும்பொழுது, கிளிண்டனும் இந்த தடுப்பூசியை ஊக்குவிப்பதற்காக ஒரு பொது இடத்தில் எடுத்துக்கொள்ள தயாராக இருப்பார் என்று கூறினார். பொது சுகாதார அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட முன்னுரிமைகள் அடிப்படையில் ஜனாதிபதி கிளிண்டன் அவருக்கான பெயர் பட்டியல் வரும்பொழுது தடுப்பூசி எடுப்பார். மேலும் அனைத்து அமெரிக்கர்களும் இதைச் செய்யும்படி கேட்டுக்கொள்ள உதவினால் அவர் அதை ஒரு பொது இடத்தில் செய்வார் என்று கிளிண்டனின் பத்திரிகை செயலாளர் ஏஞ்சல் யுரேனா கூறினார் .
அதுமட்டுமல்லாமல், முன்னாள் அதிபர் ஒபாமாவும் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில், நாட்டின் உயர்மட்ட தொற்று நோய் நிபுணரான டாக்டர் அந்தோனி ஃபாசி, தடுப்பூசி பாதுகாப்பானது என்று சொன்னால் தாம் அவரை நம்புவதாக கூறியுள்ளார். எனக்கு தெரிந்த அந்தோனி ஃபாசி போன்றவர்களுடன் நான் பணியாற்றியுள்ளேன், நான் அவரை முழுமையாக நம்புகிறேன் என்று ஒபாமா கூறினார். எனவே இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்று அந்தோனி ஃபாசி என்னிடம் சொன்னால் நிச்சயம் அதை எடுத்துக்கொள்வேன் என்றார்.
அமெரிக்காவை பொறுத்தவரை மக்கள் விழிப்புணர்வுக்காக இப்படி தலைவர்கள் முன்னிலையில் வந்து செய்துகொள்வது வழக்கமான நிகழ்வு தான். செப்டம்பர் 1, 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு பெரும்பாலான மக்கள் விமானங்களில் பயணம் செய்யவே அச்சத்தில் இருந்தனர். அந்த சமயங்களில் மக்களை ஊக்குவிக்க புஷ்ஷின் தாய் மற்றும் தந்தை, மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் H.W. புஷ் மற்றும் பார்பரா புஷ் ஆகியோர் வணீக ரீதியிலான விமானங்களில் பயணம் மேற்கொண்டனர். மற்றும் 2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட கத்ரீனா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான நிதி திரட்டவும் மற்றும் பிற தொண்டு நிறுவனங்களுக்காகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த புஷ் மற்றும் கிளின்டன் ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.