தமிழ்நாட்டில் தி.மு.க.விற்கு இணையான ஒரே கட்சி, ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட கட்சி என்ற மாபெரும் பெருமைகளை கொண்ட ஒரே கட்சியாக விளங்குவது அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியது போதும், அவரது மறைவிற்கு பிறகு ஜெயலலிதா தலைமை பொறுப்பை ஏற்றபோதும், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி – ஓ.பி.எஸ். மோதல் என்று பல விவகாரங்கள் இருந்தாலும் இன்றும் அ.தி.மு.க. எதிர்க்கட்சி என்ற அந்தஸ்துடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஓராண்டு காலமாக எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்டு வரும் மோதல் அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் இடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. தற்போது உச்சநீதிமன்றம் கடந்தாண்டு ஜூன் 11-ந் தேதி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லும் என்று அறிவித்துள்ளதால் மாபெரும் இயக்கமான அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி வசம் சென்றுவிட்டது.
கட்சி எடப்பாடி பழனிசாமி வசம் சென்றுவிட்டாலும் அவருக்கு பல முனைகளிலும் நெருக்கடி உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. ஆளுங்கட்சியான தி.மு.க.வை எதிர்கொள்ளும் அதேசமயத்தில் ஜெயலலிதாவின் விசுவாசி என்று தொண்டர்களால் அழைக்கப்படும் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோரையும் எதிர்கொள்ள வேண்டும். எடப்பாடி பழனிசாமி கடந்த சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பெற்ற வெற்றியை வைத்தே சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரானார்.
ஆனால், வெறும் கொங்கு மண்டல செல்வாக்கை மட்டும் வைத்துக்கொண்டு மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது. எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியபோது தமிழ்நாடு முழுவதும் அவரது முகமும், அவரது புகழும் அ.தி.மு.க.விற்கு வெற்றியைத் தந்தது. அவரது மறைவிற்கு பிறகு ஜெயலலிதா தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு கட்சியில் அவர் கொண்டுவந்த கட்டுப்பாடுகள், அவரது கம்பீரமான ஆளுமை அவரது முகமும், பெயருமே தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வின் அடையாளமாக மாறியது.
ஆனால், எடப்பாடி பழனிசாமியை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பட்டியலில் இணைக்க முடியாது. முதலமைச்சர் பொறுப்பை ஏற்கும் முன்பு வரை அவர் அந்தளவிற்கு மக்கள் மத்தியில் அறிமுகமில்லாதவர். அவர் தலைமையிலான ஆட்சி நீடிக்குமா? என்ற தமிழ்நாடு முழுவதும் சந்தேகம் எழுந்தபோது அதை கடந்து ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார். ஆனால், வலுவான தி.மு.க.விற்கு எதிராக மீண்டும் வெற்றி பெற வேண்டுமென்றால் தென்தமிழகத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு வேண்டும்.
ஆனால், தென் தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் சார்ந்த சமுதாய மக்களே பெரும்பான்மை என்பதாலும், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோர் ஒரே சமுதாயம் என்பதாலும் அங்கு எடப்பாடி பழனிசாமி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவது மிகவும் கடினம் ஆகும்.
தற்போது தென் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு நம்பிக்கைக்குரிய நபராக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மட்டுமே உள்ளார். மற்ற தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களில் எடப்பாடி பழனிசாமிக்காக வலுவான செயல்பாட்டை முன்னெடுக்கவில்லை என்பதன் மூலம் இதை காணலாம். இதனால், எதிர்க்கட்சித் துணைத்லைவர் உதயகுமார் மட்டுமின்றி மற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள், முக்கிய தலைவர்கள் மூலம் தென் தமிழ்நாட்டிலும் தனது செல்வாக்கை அதிகரிக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பார். அவரது முயற்சி கைகொடுக்குமா? அல்லது கைவிடுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ALSO READ | அடி மேல் அடி..! மீண்டு வருவாரா? ஒதுங்கிவிடுவாரா? என்ன செய்யப்போகிறார் ஓ.பி.எஸ்.?