Tuesday, March 28, 2023
Homeசெய்திகள்இந்தியாமின்னல் வேகத்தில் சென்று தாக்கும் எதிர் ஏவுகணை.. வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது

மின்னல் வேகத்தில் சென்று தாக்கும் எதிர் ஏவுகணை.. வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது

ஒடிசா : தரையில் இருந்து வானில் இருக்கும் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் விரைவு எதிர் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.

இந்த வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு ஒடிசா மாநிலம் பாலசோரில் இருக்கும் தளத்தில் வைத்து சோதனை செய்யப்பட்டது. சோதனையின் போது வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த விரைவு எதிர் ஏவுகணையில் நவீன ரேடார்கள் பொருத்தப்பட்டு 360 டிகிரி கண்காணிப்பை உள்ளடக்கியது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் படி, இந்த ஏவுகணை நகரும் ஆயுத வாகனங்களுக்கு வான்வழியாக வரும் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு வடிவமைக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் வேகத்தில் சென்று இலக்கை தாக்கும் சோதனை வெற்றி பெற்றுள்ளது என்று டிஆர்டிஓ கூறியுள்ளது. 8 வது முறையாக நடைபெற்ற சோதனையில் 30 கிமீ தொலைவில் இருந்த இலக்கை 5803 கிமீ வேகத்தில் பாய்ந்து சென்று இலக்கை தாக்கியதாகவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணைகள் எல்லா விதமான காலநிலைகளிலும், அணைத்து இடங்களில் இருந்தும் ஏவ முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம், பினாக்கா மல்டி-பீப்பல் ராக்கெட் லாஞ்சர்களின் (எம்ஆர்எல்எஸ்) மேம்பட்ட வகை வெற்றிகரமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதுவும் டிஆர்டிஓவால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது. இந்த மேம்படுத்தப்பட்ட வழிகாட்டுதலுடன் கூடிய பினாக்கா 60 முதல் 90 கிலோமீட்டர் வரையிலான வரம்பை பாதுகாக்கும். இது இந்திய ராணுவத்தால் நிலை நிறுத்தப்பட்டு பயன்படுத்தப்படும்.

முன்னதாக அக்டோபரில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் (டிஆர்டிஓ) ஒடிசா கடற்கரையில் தனது டேங்க் எதிர்ப்பு ஏவுகணையை சோதனை செய்தது. இது சுமார் 45 நாட்களில் நடத்தப்பட்ட 12 வது ஏவுகணை சோதனை ஆகும். லடாக் எல்லையில் இந்தியா சீனா இடையே மோதல் இருந்து வரும் சூழலில் இந்தியாவின் இந்த தொடர் சோதனைகள் முக்கியத்துவம் பெறுகிறது.