தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியில் வெளியேறிய சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ட்விட்டரில் நேற்று முழுவதும் கெட் அவுட் ரவி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியது.
இந்த நிலையில், தி.மு.க. சார்பாக சென்னையின் பல்வேறு இடங்களில் Get Out Ravi என்ற வாசகத்தோடு ஆளுநருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.
சட்டசபையில் நடந்தது என்ன..?
வழக்கமாக ஆண்டுதோறும் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அவ்வாறு வாசிக்கப்படும் ஆளுநர் உரையானது தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கும் உரையாக இருக்கும். ஆனால், நேற்று சட்டசபையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு, அமைதிப்பூங்கா, சமூகநீ்தி, சுயமரியாதை,பெரியார், அண்ணல் அம்பேத்கர்,பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி ஆகிய வார்த்தைகளை வாசிக்க மறுத்து அடுத்த பக்கங்களுக்கு சென்றார். இதனால், தி.மு.க.வும், சட்டசபையில் இருந்த கூட்டணி கட்சிகளும் கடும் அதிருப்தியில் இருந்தனர்.
ஆளுநர் பேச்சைத் தொடர்ந்து சபாநாயகர் தமிழக அரசு வழங்கிய ஆளுநர் உரையை முழுவதும் படித்து முடித்த பிறகு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு ஒப்புதல் அளித்த வாக்கியங்கள் மட்டும் சட்டசபை அவைகுறிப்பில் பதிவு செய்யப்பட வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார். இதனால், கடும் அதிருப்தியடைந்த ஆளுநர் முதலமைச்சர் பேசிக்கொண்டே இருந்தபோது பாதியில் இருந்து வெளியேறினார். அவரது செயலுக்கு கண்டனங்கள் தொடர்ந்து குவிந்து வருகிறது.
கெட் அவுட் ரவி:
இந்த நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் Get Out Ravi என்ற வாசகத்தோடு திமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் டுவிட்டரில் நம்பர் 1 டிரெண்டிங் என பதிவிட்டும், இதனை பதிவு செய்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளனர்.