Monday, May 29, 2023
Homeசெய்திகள்புகழ்பெற்ற சதுரகிரி மலைக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி- அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

புகழ்பெற்ற சதுரகிரி மலைக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி- அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த சிவன் கோவில் மிகவும் புகழ்பெற்றது. மிகவும் புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு செல்லும் பாதைகள் கற்களும், முட்களும், பாறைகளும் நிறைந்த கரடு முரடான பாதைகள் கொண்டது. இக்கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என 8 நாட்களில் மட்டும் அனுமதி வழங்கப்படும்.

இந்த நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தை மாதம் பிரதோஷம் மற்றும் தை அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் வரும் 22 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆண்டுதோறும் தை அமாவாசை, மகாளாய அமாவாசை, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் சுந்தர மகாலிங்க ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சதுரகிரி மலைக்கு செல்லும் பாதையில் ஏராளமான சிறு, சிறு அருவிகள உள்ளன. அந்த அருவிகளில் குளிக்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவில் மலைப்பகுதியில் தங்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதுரகரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கத்தை தரிசப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சதுரகிரி மலையில் காட்டெருமை, காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால், மலைக்கு சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.