Saturday, March 25, 2023
Homeசெய்திகள்உலகம்உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்.. லட்சக்கணக்கான மிங்க் விலங்குகளை கொல்லும் டென்மார்க்

உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்.. லட்சக்கணக்கான மிங்க் விலங்குகளை கொல்லும் டென்மார்க்

டென்மார்க் : டென்மார்க்கில் மிங்க் எனும் கொறிவகை விலங்குகளிடம் மியூட்டேட்(உருமாற்றம்) அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அந்த பகுதிகளில் கடுமையான ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு அரசாங்கம் பிறப்பித்துள்ளது. மனிதர்களிடத்திலும் இவ்வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

டென்மார்க் தான் உலகில் அதிகளவில் மிங்க் விலங்குகளை அதிகளவில் வளர்க்கும் நாடு. மிங்க் விலங்குகளின் ரோமங்கள் விலை உயர்ந்தவை. அதிலிருந்து பல பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக ஏராளமான மிங்க்குகள் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. இப்போது இந்த பண்ணைகளில் வளர்க்கடும் மிங்க்குகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இவற்றின் உடலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன் அது மியூட்டேட் அடைய தொடங்குகிறது. இதனால் மியூட்டேட் அடைந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும் போது மேலும் ஆபத்தானதாக மாறும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த மியூட்டேட் அடைந்த வைரஸ் எதிர்காலத்தில் உருவாக்கக்கூடிய தடுப்பூசிக்கு சவாலானதாக இருக்க வாய்ப்பிருப்பதாக டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் விளைவாக, டென்மார்க்கின் வடக்கு பகுதியில் உள்ள ஏழு நகராட்சிகள், டென்மார்க்கின் பெரும்பாலான மிங்க் பண்ணைகள், மாவட்ட எல்லைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Denmark tightens lockdown after discovered mink coronavirus mutation

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் ஃபிரடெரிக்சன் வலியுறுத்தியுள்ளார். டிசம்பர் 3ம் தேதி வரை அந்த பகுதிகளுக்கு செல்லவோ அல்லது அங்கிருந்து வெளியேறுவதற்கோ பேருந்து மற்றும் ரயில் சேவைகளும் இயக்கப்பட மாட்டாது. பள்ளிகள், உணவு விடுதிகள், பார்கள், ஜிம், நூலகம், அருங்காட்சியகம் உள்ளிட்டவைகளும் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மியூட்டேட் அடைந்த புதிய வகை வைரஸ்கள் இருப்பதை கண்டறிந்த உடன் அரசாங்கம் உடனடியாக பண்ணைகளில் வளர்க்கப்படும் அனைத்து மிங்க்களை அகற்றவும் பாதிக்கப்பட்ட அணைத்து மிங்க்களையும் கொலை செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை, வடக்கு பகுதியில் 12 பேருக்கு வைரஸின் புதிய வடிவம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயின் தீவிர அறிகுறிகள் அவர்களுக்கு காட்டவில்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த பகுதியில் பதிவான 783 கொரோனா பாதிப்பில் பாதிப்பேருக்கு மேல் இந்த மிங்க் விலங்குடன் தொடர்புடையவர்கள் என்று சுகாதார துறை அமைச்சர் மேக்னஸ் ஹியூனிக் கூறியிருந்தார்.

நாட்டிலுள்ள 15 மில்லியன் மின்ங்க்ஸை அப்புறப்படுத்த சுமார் 700 மில்லியன் டாலர் மதிப்பில் செலவாகும் என அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்தியத்துக்கான இயக்குனர் ஹான்ஸ் க்ளூக் இதுபற்றி கூறுகையில், டென்மார்க் மிங்க் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடிவெடுத்திருப்பது அந்நாட்டின் உறுதியையும் தைரியத்தையும் காட்டுகிறது. இது அவர்களின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

மிங்க் பண்ணைகளில் தொடர்ந்து வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால் ஜூன் முதல் பாதிக்கப்பட்ட மிங்க் மந்தைகளை அகற்றவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். டென்மார்க் உலகின் மிகப்பெரிய மிங்க் தோல்களை உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது, இது ஆண்டுதோறும் 17 மில்லியன் மிங்க் தோளில் செய்யப்பட்ட உடைகளை உற்பத்தி செய்கிறது மற்றும் சுமார் 4,000 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குகிறது. கடந்த ஆண்டு, டென்மார்க்கின் மிங்க் பெல்ட் தொழில் சுமார் 800 மில்லியன் டாலர் ஏற்றுமதியை அதிகரித்தது. அங்கிருக்கும் மிங்க் வளர்ப்பாளர்களுக்கான தொழில் சங்கம், “டென்மார்க்கிற்கு இது ஒரு கருப்பு நாள்” என்று அழைத்தது. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.