டெல்லி: கடந்த 58 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக குளிரான மாதமாக இந்தாண்டு அக்டோபர் மாதம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நாடு முழுவதும் குளிர் காலம் ஆரம்பமாக உள்ளது. இந்த நிலையில் தான் இந்த வருடம் அக்டோபர் மாதத்தின் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 17.2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 1962 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16.9 டிகிரி செல்சியஸ் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலையாக பாதிவாகியிருந்தது. சாதாரண நாட்களில் அக்டோபர் மாதம் டெல்லியின் குறைந்தபட்ச சராசரி வெப்பநிலை 19.1 டிகிரி செல்ஸியஸாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த வியாழக்கிழமை 12.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது 26 ஆண்டுகளில் மிக குறைந்த அளவாகும். கடைசியாக 1994 ஆம் ஆண்டுதான் இந்த அளவிற்கு குளிர்ந்த காலநிலை இருந்துள்ளது. அப்போது 12.3 டிகிரி பதிவாகியுள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வழக்கமாக அக்டோபர் மாதங்களில் இந்த இடைப்பட்ட காலங்களில் 15 முதல் 16 டிகிரி செல்ஸியஸ் தான் குறைந்த வெப்பநிலையாக பதிவாகும்.
இந்திய வானிலை மையத்தின் பிராந்திய பிரிவு தலைவர் ஸ்ரீவஸ்தவா இதுகுறித்து கூறுகையில் மேகமூட்டங்கள் இல்லாதது இந்த குறைந்த வெப்பநிலை நிலவ காரணம் என்று கூறியுள்ளார். அமைதியான காற்று மற்றொரு காரணம், இது மூடுபனி மற்றும் உறைபனி உருவாக அனுமதிக்கிறது என்று கூறினார். இதுவரை டெல்லியின் வரலாற்றில் மிக குறைந்த வெப்பநிலை என்றால் அது 1937 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி ஏற்பட்ட 9.4 டிகிரி செல்ஸியஸ் தான் என்றும் ஸ்ரீவஸ்தவா குறிப்பிட்டுளளார்.