டெல்லி: 2021 ஆம் ஆண்டு டெல்லியில் இருந்து லண்டனுக்கு சொகுசு பேருந்து பயணம் துவங்க உள்ளது. ஹரியானா மாநிலம், குருகிராமை சார்ந்த
அட்வென்ச்சர்ஸ் ஓவர்லாண்ட் (adventures overland) என்ற நிறுவனம் இந்த சேவையை வழங்குகிறது. இதற்கு ‘பஸ் டூ லண்டன்'(Bus To London) என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த பேருந்து பயணம் டெல்லியில் இருந்து துவங்கி சுமார் 18 நாடுகள் வழியே 20000 கிலோமீட்டர் தூரம் பயணித்து 70 நாட்களில் லண்டனை சென்று அடையும். இதுவே உலகின் மிக நீளமான பஸ் பயணமாக இருக்கும்.
இந்த பஸ் பயணம் அடுத்த ஆண்டு மே மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, இது சிறப்பான கோடைகால பயணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஸ் ரூட்:
பயணத்தின் போது சுற்றுலாப் பயணிகள் மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ரஷ்யா, லிதுவேனியா, லாட்வியா, போலந்து, செக் குடியரசு, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நேரத்தை செலவிடுவார்கள்.
இந்த பயணத்திற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது, இந்த சொகுசு பேருந்தில் 20 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். டெல்லியில் இருந்து லண்டன் செல்ல ஒரு நபருக்கு 15 லட்சம் ரூபாய் பஸ் கட்டணமாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
லண்டன் டு கொல்கத்தா பஸ்:
லண்டனில் இருந்து கொல்கத்தாவுக்கு 1957 ஆம் ஆண்டு சாலை வழி பயணம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆல்பர்ட் ட்ராவல் பஸ் எனும் பேருந்து இந்த சேவையை வழங்கியது. லண்டன் விக்டோரியா பேருந்து நிலையத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு இந்த பேருந்து இயக்கப்பட்டது.
லண்டனில் புறப்படும் இந்த பேருந்து பெல்ஜியம், ஜெர்மனி, ஆஸ்திரியா, யுகோஸ்லாவியா, பல்கேரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் வழியாக இந்தியா வந்தடைந்த பிறகு டெல்லி, ஆக்ரா, அலகாபாத், பனாரஸ் வழியாக 7 ,957 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு 48 நாட்களில் கொல்கத்தாவை சென்றடையும்.
லண்டனில் இருந்து கொல்கத்தாவுக்கு ஒரு வழி பயணம் செய்ய 8000 ருபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.