Saturday, March 25, 2023
Homeசெய்திகள்உலகம்திடீரென பரவும் மூளையை உண்ணும் அமீபா.. பீதியில் இருக்கும் மக்கள்.. இன்னும் என்னவெல்லாம் இருக்கோ!

திடீரென பரவும் மூளையை உண்ணும் அமீபா.. பீதியில் இருக்கும் மக்கள்.. இன்னும் என்னவெல்லாம் இருக்கோ!

வடக்கு அமெரிக்காவில் மூளையை தின்னும் அமீபா(Brain-eating Amoeba) திடீரென பரவி வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே மியூட்டேட் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் இப்போது இதுவும் அதனுடன் இணைந்துள்ளது.

2020 ஆம் ஆண்டு முடிய இன்னும் 9 நாட்கள் உள்ளன. கடந்த 11 மாதத்தில் உலகம் ஏறக்குறைய எல்லா வகையான கொடூர நிகழ்வுகளையும் மோசமான மரணங்களையும் ஆச்சர்ய நிகழ்வுகளையும் பார்த்துவிட்டது. இதுவரை பார்த்தது போதாது என்பது போல் வருடத்தின் இறுதியில் இப்போது மேலும் ஒரு அச்சுறுத்தல் உலக மக்களை பீதிக்குள்ளாக்கி உள்ளது.

கடந்த செப்டம்பரில் டெக்ஸாஸ் மாகாணத்தில் 6 வயது சிறுவன் இந்த அமீபா மூலம் ஏற்படும் நெக்லேரியா பவுலேரி எனும் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தான். அதன் பின்னர் தான் அந்த பகுதிக்கான பொது பயன்பாட்டு நீரில் இந்த அமீபா இருந்தது கண்டறியப்பட்டது. முன்பு அமெரிக்காவின் தெற்கு பகுதிகளில் மட்டும் அடிக்கடி கண்டறியப்பட்ட இவ்வகை அமீபா இப்போது வடக்கு மாகாணங்களிலும் பரவ தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் படி, இந்த கேஸ்கள் மத்திய மேற்கு மாகாணங்களை நோக்கி பரவி வருகின்றன. அதேநேரம் குடிநீரில் இருந்தோ அல்லது மற்றவர்களிடம் இருந்தோ இந்த அமீபா பிறருக்கு பரவாது என உறுதிப்படுத்தியுள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், நீரில் இருந்து ஒருவரின் மூக்கு வழியாக உடலுக்குள் சென்று நேரடியாக மூளையை தாக்குகிறது என தெரிவித்துள்ளது.

நெக்லேரியா

ஒருசெல் உயிரியான இந்த நெக்லேரியா பவுலேரி அமீபா தொற்று மூலம் ஏற்படும் இந்த நோய்க்கு எசன்ஷியல் அமெபிக் மெனிங்கோயின்ஸ்பாலிடிஸ் என அழைக்கப்படுகிறது. இந்த வகை அமீபா பொதுவாக மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் வாழக்கூடியது. பொதுவாக பொதுமக்கள் அதிகம் புழங்கக்கூடிய நீச்சல் குளங்கள் போன்ற இடங்களில் இருந்து அதிகம் பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மூக்கு வழியாக நேரடியாக மூளைக்கு சென்று மூளையிலுள்ள திசுக்களைத் தாக்கும். ஆனால் இந்த உணர்வு மனிதர்களுக்கு தெரியாது. இதன் அறிகுறிகளாக கடுமையான ஒற்றை தலைவலி, கழுத்து வலி, தலைசுற்றல் மற்றும் வாந்தி, மனசோர்வு, குழப்பம், ஹாலோசினேஷன் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வளர்ந்து வரும் தொற்று நோய்கள் குறித்து வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், நெக்லேரியா பவுலேரி தொற்று பாதிப்பு அதிகரிக்கும் வெப்பநிலை மற்றும் பொழுதுபோக்கு நீர் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அதிகரித்திருக்கலாம், ஏரி, குளம் போன்ற நன்னீர் போன்ற பகுதிகளில் இருந்து மனிதர்களுக்கு பரவவியிருக்கலாம் என்று கூறியுள்ளது. பொதுவாக கோடை காலமான ஜூன், ஜூலை, செப்டம்பர் போன்ற காலங்களில் தான் இதுவரை பரவியுள்ளது.

ஆனால் இப்போது குளிர் காலங்களில் இந்த நோய் தொற்று அதிகரித்துள்ளது. ஆனால் மிகவும் அரிதாக தான் இந்த பாதிப்பு இதுவரை ஏற்பட்டுள்ளது. கடந்த 2010 முதல் 2019 வரை இடைப்பட்ட காலத்தில் 34 பேருக்கு இந்த அமீபாவால் பாதிப்பு ஏற்பட்டது. 30அதில் பேருக்கு பொழுதுபோக்கு நீர்நிலைகளிலிருந்தே இந்த தொற்று ஏற்பட்டுள்ளது. .அமெரிக்காவில் 1962 – 2018 காலகட்டத்தில் 145 பேரை இந்த நோய் தாக்கியது. அதில் நான்கு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.

இதில் மோசமான ஒரு தகவல் என்னவென்றால் ஓருவரின் உடலில் அமீபா இருப்பதைக் கண்டறிய எந்த சோதனையும் இதுவரை வடிவமைக்கப்படவில்லை. எனவே, நோயாளி அறிகுறிகளை வெளிப்படுத்த சில நேரங்களில் நீண்ட நாட்கள் ஆகலாம், இது ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இப்போது இந்த பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து மக்கள் கவனமாக இருக்கும்படி அந்தந்த மாகாண சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், குழாய்கள், ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்கள் போன்ற பிற மூலங்களிலிருந்து பெறப்படும் தண்ணீருடன் நாசித் தொடர்பை தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் உள்ளூர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.