சென்னை: வங்கக் கடலில் உருவான புரேவி புயல் காரணமாக தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், தமிழகம் மற்றும் கேரளாவில் இரண்டு நாட்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் உருவான 3 வது புயல் இதுவாகும்.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்து சரியாக 7 நாட்கள் ஆன நிலையில் தற்போது மற்றொரு புயல் தமிழக கடற்கரையோர பகுதிகளை தாக்க உள்ளது. நிவர் புயலுக்கு தமிழகம் முன்கூட்டியே இருந்தது, இதனால் பெருமளவு சேதங்கள் தவிர்க்கப்பட்டது. இப்போது அடுத்த புயலுக்கு தமிழகம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமாரி உள்ளிட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். புரேவி புயல் இலங்கையின் திருகோணமலை- பருத்தித்துறை இடையே முல்லைத்தீவு அருகே நேற்று இரவு 9 மணியளவில் புகரையை கடக்க தொடங்கியது. இதனால் அந்த பகுதிகளில் கடும் கனமழை பெய்தது, மணிக்கு 80 கி.மீ. முதல் 90கி.மீ வேகத்திலான பலத்த காற்று வீசியது. இந்த புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக இலங்கையில் பலத்த மழையும் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
இந்த நிலையில் இலங்கையை கடந்து தற்போது தமிழகம் நோக்கி இந்த புயல் நகர்ந்துகொண்டு உள்ளது. தமிழகத்தில் பாம்பன் – கன்னியாகுமாரி இடையே இது கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் திருகோணமலை பகுதியில் கரையை கடந்து மன்னர் வளைகுடா கடல் பகுதிக்குள் இது நுழையும், பின்னர் வியாழக்கிழமை பிற்பகலுக்கு மேல் பாம்பனுக்கு அருகில் வந்து வியாழன் இரவு அல்லது வெள்ளி அதிகாலை இந்த புயல் தமிழகத்தில் கரையை கடக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், குறிப்பாக கன்னியாகுமாரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் தமிழகத்தில் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் அதிகபட்சமாக 100 கிமீ வேகத்தில் காற்றுவீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயலை விட புரேவி வலுவானதா ?
வங்கக்கடலில் கடந்த மாதம் 25ம் தேதி உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறியது. அதனால் மணிக்கு 89 முதல் 117 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் இருந்தது. இது கடந்த வாரம் புதுவே அருகே கரையை கடந்தது. சமீபத்தில் தான் கடந்து சென்ற நிவர் புயல் காரணமாக வங்காள விரிகுடா கடலின் தென்மேற்கு பகுதியில் கடலில் நிலையற்ற தன்மை இன்னமும் இருக்கிறது. இதனால் புரேவி புயல் தீவிர புயலை கடந்து மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். நிவாரால் ஏற்பட்ட உயர்வு காரணமாக, புரேவி புயல் மட்டுப்படுத்தப்பட்ட தீவிரத்தை கொண்டிருக்கும் என்று இந்திய வானிலை மையத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கடலின் ஒரே பிராந்தியத்தில் இத்தகைய தொடர்ச்சியான நிகழ்வு நடைபெறும் போது முதலில் ஏற்படும் நிகழ்வு அத்தகைய உயர்வுக்கு வழிவகுக்கும். எனவே கடலின் மேற்பரப்பு போதுமான அளவு சூடாக இல்லாமல் இருக்கும் நிலையில் புரேவி உட்பட எந்த ஒரு புயலும் மேலும் தீவிரமடைய போதுமான எரிபொருள் கிடைக்காது என்று கூறியுள்ளார். டிசம்பர் 5ம் தேதிக்கு பிறகு கரையை கடந்து ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழக்கும் வரை புரேவி புயல் தீவிர புயலாக மட்டுமே இருக்கும் என்றும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
எந்த பகுதிகளுக்கு அதிக பாதிப்பு ?
இந்த புரோவி புயலால் தமிழகத்தின், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களும், கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பதினம்திட்டா, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 3ஆம் தேதி அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வடதமிழகம், புதுச்சேரி, ஆந்திராவின் தெற்கு கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிமீ என்கிற அளவில் இருக்கும்.
20 வருடத்திற்கு பிறகு நடக்கும் நிகழ்வு:
இலங்கையின் பகுதியை ஒரு புயல் தாக்கிவிட்டு பின்னர் தமிழகத்தை தாக்குவது என்பது கடந்த 20 வருடத்தில் நடைபெறவில்லை. கடைசியாக 2000 ஆம் ஆண்டு வங்கக்கடலில் உருவான புயல் இலங்கையின் திருகோணமலையை கடந்து தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை தாக்கியது. இப்போது 20 வருடத்திற்கு பிறகு அதே பாதையில் புரேவி புயல் பயணிப்பதாக கூறப்படுகிறது. அந்த புயலுக்கு பிறகு தமிழகத்தில் கடந்த இருபது ஆண்டுகளில் ஃபர்னூஸ் புயல் -2005, நிஷா புயல் – 2008, ஜல் புயல் – 2010, தானே புயல் – 2011, நீலம் புயல் – 2012, வர்தா புயல் – 2016, ஒக்கி புயல் – 2017, கஜா புயல் – 2018. ஆகிய புயல்கள் தமிழகத்தில் கடந்த காலங்களில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய புயல்களாகும். அந்த வரிசையில் புரேவி புயல் சேருமா அல்லது சாதாரணமாக கடந்து சென்று விடுமா என்பது இனிவரும் நாட்களில் தெரியும்.