கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் சுமார் 20 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் கூறியுள்ளது. பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து மிக குறுகிய நேரத்தில் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படுவது இதுவே முதல்முறை என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ளது. 4 கோடிக்கும் அதிகமானோர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உலகின் பொருளாதாரத்தையும் இந்த குட்டி வைரஸ் முடக்கி போட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையால் பல நாடுகளிலும் லாக்டவுன் போடப்பட்டுள்ளதால் அணைத்து விதமான வர்த்தக தொடர்பும் பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது அமெரிக்கா தான். அதற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதிலும் அதன் வீரியம் குறைந்து வருகிறது, இந்தியா உட்பட பல நாடுகளிலும் அதன் பாதிப்பு குறைந்து வருவது உலக மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் தான் அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தாக்க தொடங்கியிருக்கிறது. முதல் கட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பை விட இரண்டாம் அலையின் போது அதிக அளவில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் கணிக்கப்பட்டது. இதனால் ஸ்பெயின் நாட்டில் மீண்டும் மருத்துவ அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பல ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கடுமையான பொது முடக்கத்திற்கு அந்நாடுகள் தயாராகி வருகின்றன.
20 லட்சம் பேருக்கு கொரோனா
இதற்கிடையே தான் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் சுமார் 20 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் கூறியுள்ளது. பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து மிக குறுகிய நேரத்தில் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படுவது இதுவே முதல்முறை என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் கூறுகையில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக ஐரோப்பிய பிராந்தியங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 1.3 மில்லியனுக்கு மேல் புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன, இது உலகம் முழுவதிலும் பதிவான புதிய கேஸ்களில் 46% ஆகும். மேலும் இறப்பு விகிதமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த வாரங்களை விட 35 சதவிகிதம் இறப்பு விகிதங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை
இப்போது இறப்பு விகிதம் அதிகரித்தாலும் தொற்றுநோயின் ஆரம்ப காலத்துடன் ஒப்பிடும் போது ஒப்பீட்டளவில் சற்று குறைவு தான் என்றும் உலக சுகாதார மையம் கூறியுள்ளது. ஐரோப்பா முழுவதிலும் 21 நாடுகளில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும், ஐசியூ வார்டுகளின் பற்றாக்குறை அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் 18 சதவிகிதம் பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் 7 சதவிகிதம் பேர்ருக்கு ஐசியூ அல்லது வெண்டிலேஷன் உதவி தேவைப்படுவதாகவும் உலக சுகாதார மையத்தின் தகவலில் கூறப்பட்டுள்ளது .
இதற்கிடையே இந்தியாவிலும் குளிர் காலங்களில் கொரோனாவின் இரண்டாம் அலை தாக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான நிலையான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் வரை கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்துவது கடினம். ஏற்கனவே இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை தான் தற்போது ருத்திரத்தாண்டவம் ஆடிவருவது குறிப்பிடத்தக்கது.