சீனாவின் கிழக்கு குயிங்டோ நகரில் பதப்படுத்தப்பட்ட கடல் உணவு வகைகளில் கொரோனா வைரஸ் இருந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தி இருக்கின்றனர். முன்னதாக கடல் உணவுகளை இறக்குமதி செய்யும் நிறுவனத்தை சேர்ந்த இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக சீனா பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை இறக்குமதி செய்யும் விவகாரத்தில் கடுமையாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மேலும் சில நிறுவனங்களுக்கு இறக்குமதி செய்ய தடை விதித்து இருக்கிறது. இதுதவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஆய்வு செய்ய துவங்கி உள்ளது.
அந்த வகையில் ஆய்வு செய்த போது, இறக்குமதி நிறுவன ஊழியர்களில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்த 147 பேரில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
இறக்குமதி நிறுவனத்தின் 51 பொருட்களில் கொரோனாவைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், இவை எதுவும் சந்தைக்கு அனுப்பப்படவில்லை. கொரோனாவைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளை இறக்குமதி செய்த நிறுவனத்திற்கு ஒரு வாரம் தடை விதிப்பதாக சீன சுங்க துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.