நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாரத யாத்திரை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பயணத்தில் பங்கேற்ற அக்கட்சியின் எம்.பி. சந்தோக்சிங் சவுத்ரி நடைபயணத்திலே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம், உத்தரபிரதேசம் எனப் பல மாநிலங்கள் வழியாக 2022 டிசம்பர் 24ஆம் தேதி டெல்லியை அடைந்தது. நடப்பாண்டில் ஜனவரி 6ஆம் தேதி ஹரியானாவில் தொடங்கிய இந்தப் பயணம் பஞ்சாப் மாநிலத்தில் தற்போது நுழைந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் இன்று காலை நடைபெற்ற நடைபயணத்தில் அக்கட்சியின் எம்.பி. சந்தோக் சிங் சவுத்ரி கலந்துகொண்டார். பஞ்சாப்பின் பில்லார் பகுதியை நடைபயணம் அடைந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால், கூட்டத்தில் பங்கேற்றோர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மயங்கி விழுந்த சந்தோக்சிங்கை லூதியானாவில் உள்ள மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனை அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சவுத்ரி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த துயர சம்பவம் பற்றி அறிந்த ராகுல்காந்தி உடனடியாக மருத்துவனைக்கு சென்றார். சந்தோக் சிங் மரணத்தால் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ராகுல்காந்தியின் நடைபயணம் இன்று ஒத்திவைக்கப்பட்டது.
சவுத்ரியின் திடீர் மரணத்திற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பஞ்சாப் முதல்வர் பகவந்த்மன், முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பா.ஜ,க, ஆட்சிக்கு எதிராக ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்த யாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. உயிரிழந்திருப்பது தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சந்தோக் சிங் சவுத்ரிக்கு 76 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.