Tuesday, March 28, 2023
Homeசெய்திகள்உலகம்ஹாலிவுட் படங்களை விட டிவிஸ்ட்.. அமெரிக்க அரசியல்வாதிகளை நடுங்க வைத்த சீன பெண் உளவாளி.. கண்டுபிடித்த...

ஹாலிவுட் படங்களை விட டிவிஸ்ட்.. அமெரிக்க அரசியல்வாதிகளை நடுங்க வைத்த சீன பெண் உளவாளி.. கண்டுபிடித்த எப்.பி.ஐ

வாஷிங்டன் : சீனாவை சேர்ந்த பெண் உளவாளி ஒருவர் அமெரிக்காவின் பல உயர்மட்ட அரசியல்வாதிகள், மேயர்களை குறிவைத்து தன்னுடைய வலையில் வீழ்த்தி தகவல்களை பெற முயற்சி செய்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய அந்த சீன உளவுத்துறையை சேர்ந்த பெண் அரசியல் அதிகாரத்திற்கு அருகாமையில் இருப்பதற்காக 2011 மற்றும் 2015 க்கு இடைப்பட்ட காலத்தில் பல உள்ளூர் மற்றும் தேசிய அரசியல்வாதிகளுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்டார் என்று தற்போதைய மற்றும் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நடவடிக்கைக்கு பின் இருந்த பெண் சீனாவை சேர்ந்த கிறிஸ்டின் ஃபாங் என கண்டறியப்பட்டுள்ளது. இவர் சீனாவின் மாநில பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் நாட்டின் முக்கிய சிவில் உளவு நிறுவனம் சார்பாக செயல்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.

அந்த அறிக்கையின் படி, ஃபாங் கலிபோர்னியாவின் பே ஏரியாவில் பிரச்சார நிதி திரட்டல், விரிவான தொடர்புகள், குறைந்தது இரண்டு மத்திய மேற்கு மேயர்களுடனான காதல் அல்லது பாலியல் உறவுகள் மூலம் தன்னுடைய தொடர்புகளை வளர்த்துக்கொண்டார் என கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்த இந்த நடவடிக்கை, பீஜிங் தொடர்பான வெளியுறவு கொள்கை பிரச்சனைகளில் செல்வாக்கு செலுத்துவதை நோக்கமாகக் கொண்ட சீனாவின் ஆக்ரோஷமான அரசியல் தலையீடு நடவடிக்கைகளை வெளிப்படுத்தியுள்ளது.

அரசியல்வாதிகளுடன் எப்படி நெருக்கமானார்?

ஃபாங் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர் அமெரிக்காவில் இருந்தபோது அவருடைய வயது இருபதுகளின் கடைசி அல்லது முப்பதுகளின் தொடக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. 2011 ஆம் ஆண்டில் பே ஏரியா பல்கலைக்கழகத்தில் மாணவராக சேர்ந்தார் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. பாங் ஆரம்பத்தில் தனது பல்கலைக்கழகத்தில் சீன-அமெரிக்க சங்கங்களின் தலைவரானதன் மூலம் தனக்கான முக்கியத்துவத்தை வளர்த்துக்கொண்டார். பின்னர் தன்னுடைய பதவியை பயன்படுத்தி அரசியல் வட்டாரங்களில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார்.

How chinese spy make close tie with american politicians

தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் கொடுத்த தகவல்களின் படி, ஃபாங் பல ஆண்டுகளாக அவர் ஏற்பாடு செய்யும் உயர்மட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ள அரசியல் பிரமுகர்கள், வணிக நிர்வாகிகள் மற்றும் சீன தூதரக அதிகாரிகளை பாங் அடிக்கடி அழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் பிற முக்கிய நபர்களுடன் நெருக்கமாவதற்கு ஃபாங் அரசியல் கூட்டங்கள், குடிமை சமூக மாநாடுகள், பிரச்சார பேரணிகள் மற்றும் வளாக நிகழ்வுகளை அவர் பயன்படுத்தினார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். ஃபாங் தன்னுடைய பங்களிப்பின் மூலம் ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ்மென் எரிக் ஸ்வால்வெல், அப்போதைய ஃப்ரீமாண்டின் மேயரான பில் ஹாரிசன், காங்கிரஸின்வுமென் ஜூடி சூ மற்றும் இந்திய-அமெரிக்க காங்கிரஸ்காரர் ரோ கன்னா உள்ளிட்ட பல அரசியல்வாதிகளுடன் தொடர்புகளை வளர்த்துக் கொண்டார்.

அமெரிக்க மேயர்களுக்கான பிராந்திய மாநாடுகளில் ஃபாங் தொடர்ச்சியாக கலந்துகொள்ள தொடங்கினார். இது நாடு முழுவதும் அரசியல்வாதிகளின் தொடர்பை ஏற்படுத்த அவருக்கு உதவிகரமாக இருந்துள்ளது. மத்திய மேற்கு நகரங்களின் குறைந்தது இரண்டு மேயர்களுடன் பாலியல் அல்லது காதல் உறவுகளிலும் ஈடுபட்டு இருக்கிறார். ஆனால் அது யார் என்பது குறித்த விவரங்களை உளவுத்துறை அதிகாரிகள் கூறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்தது இரண்டு அரசியல்வாதிகளுடன் பாலியல் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார் என்பது எப்.பி.ஐ-ன் மின்னணு கண்காணிப்பில் தெரியவந்துள்ளது. என்னதான் அரசியல் வட்டாரங்களில் தொடர்ச்சியாக இயங்கி வந்தாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகம் அறியப்படவில்லை. அதிகபட்சம் அவர் ஒரு பணக்கார குடும்ப பின்னணி கொண்டவரும், வெள்ளை கலர் பென்ஸ் காரில் வலம்வர கூடியவர், போன்ற சாதாரண தகவல்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன.

சிக்கியது எப்படி ?

ஆக்சியோஸ் நடத்திய ஆய்வின் படி, அமெரிக்க அதிகாரிகள் நேரடியாக ஃபாங்கை கண்காணிக்க தொடங்கவில்லை. சான் பிரான்சிஸ்கோ துணைத் தூதரகத்தில் மற்றொரு இரகசிய தூதரை ஆய்வு செய்யும் போது ஃபாங் நடவடிக்கைகளை கவனிக்க தொடங்கினர். அரசியல் தகவல்களை சேகரிக்கும் குற்றச்சாட்டில் சந்தேகத்திற்குரிய நபரை பின்தொடர்ந்ததில் அவர் இந்த ஃபாங் பெண்ணை அடிக்கடி தொடர்பு கொண்டது தெரிய வந்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதன் பின்னரே எப்.பி.ஐ கண்காணிப்பு வளையத்திற்குள் ஃபாங் கொண்டுவரப்பட்டார். மேலும் அவர் அமெரிக்க அரசியல்வாதிகளுடன் நெருங்கி செல்வதன் மூலம் அரசியல் நடவடிக்கைகளில் தன்னுடைய செல்வாக்கை அதிகரிப்பது தெரிய வந்துள்ளதாக மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்க அரசியல்வாதிகளுடன் நெருக்கமாவதற்காகவே அவர் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டும் இருக்கிறார். இதன் மூலம் ஃபாங் சந்தேகத்திற்குரிய ஒரு மிஷனில் இருக்கிறார் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஃபாங்கின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து அமெரிக்காவின் மூத்த உளவுத்துறை அதிகாரிகள் அவரது நடவடிக்கைகள் குறித்து பல உள்ளூர் மற்றும் தேசிய அரசியல்வாதிகளை எச்சரித்துள்ளனர். அவர்கள் தங்கள் அலுவலகங்களில் உள்ள மற்ற சீன உளவாளிகளைப் பற்றியும் எச்சரிக்கை செய்துள்ளனர்.

திடீரென காணவில்லை:

2015 ஆம் ஆண்டுக்கு பிறகு ஃபாங் திடீரென மாயமாக மறைந்து போனது சீன உளவுத்துறைக்கு தகவல் சேகரிக்கும் நடவடிக்கையில் அவருடைய ஈடுபாட்டை மேலும் உறுதிப்படுத்தியது. ஜூன் 2015 இல் ஒரு நிகழ்ச்சிக்காக ஃபாங் வாஷிங்டனுக்கு பயணிக்கத் திட்டமிட்டிருந்தார், ஆனால் திடீரென சீனாவுக்குத் திரும்ப வேண்டும் என்று கூறி அதை எதிர்பாராத விதமாக ரத்து செய்தார் என்று அவருடன் அந்த வாஷிங்டன் செல்ல இருந்த ஒருவர் கூறியிருக்கிறார். அத்துடன் அவர் யாரையும் தொடர்பு கொள்ளவும் இல்லை. அணைத்து அரசியல் தொடர்புகளையும் துண்டித்துவிட்டார். பே ஏரியாவில் உள்ள அவருடைய பல அரசியல் தொடர்புகள் அமெரிக்காவிலிருந்து திடீரென வெளியேறியதில் ஆச்சரியப்படுவதோடு குழப்பமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

அரசியல் நிகழ்வுகளில் அடிக்கடி ஃபாங்கைக் பார்த்திருக்கும் குபெர்டினோவின் முன்னாள் மேயர் கில்பர்ட் வோங், சீனா அத்தனையில் இருந்தும் அவருடைய முகத்தை மறைத்துவிட்டது என்றார். அன்று திடீரென சீனா திரும்புவதாக கூறிய ஃபாங் இன்றுவரை நாடு திரும்பவில்லை என முன்னாள் அதிகாரிகளும் அவருக்கு நெருக்கமானவர்களும் தெரிவித்துள்ளனர்.

என்ன திட்டம் :

இருப்பினும் ஃபாங் என்ன வகையான தகவல்களை தன்னுடைய உயர் அதிகாரிகளுக்கு கூறியிருப்பார் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. ஆனால் எந்தவொரு முக்கியமான அல்லது வகைப்படுத்தப்பட்ட தகவல்களை பெற்று இருக்க மாட்டார் என்று தாங்கள் நம்புவதாக அதிகாரிகள் மேற்கோள்காட்டியுள்ளனர். இந்த விஷயம் குறித்து கூறியுள்ள அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் ஃபாங் வழக்கு மிகப்பெரிய விஷயம் என தெரிவித்துள்ளனர். ஏனெனில் அவர் முக்கியமானவர்களை அணுகியுள்ளார். அவர் அமெரிக்காவில் இருந்ததற்கு முக்கிய காரணம் அரசியல் உளவு தகவல்களை சேகரித்து சீனாவுக்கு அனுப்புவதன் மூலம், பீஜிங்கின் வெளியுறவு பிரச்சனைகளில் சீனா தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒரு இரகசிய சீன உளவுத்துறை செயற்பாட்டாளருக்கு இடையிலான நெருக்கமான உறவுகள் சீன அரசாங்கத்திற்கு எதிரான முக்கிய முடிவெடுப்பவர்களின் கருத்தை திசைதிருப்ப வாய்ப்புகளை வழங்கும். சீனாவுடன் நேரடியாக தொடர்புடைய வெளியுறவுக் கொள்கை சிக்கல்கள், அல்லது உள்ளூர் முதலீடுகளுக்கு சீன நிறுவனங்களுடன் கூட்டுசேர்வது போன்ற நடவடிக்கையில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி செய்யும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒபாமா நிர்வாகத்தின் போது ஃபாங்கின் நடவடிக்கைகள் முடிவடைந்த நிலையில், டிரம்பின் நிர்வாகத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பது குறித்த பிரச்சனைகள் அமெரிக்காவிற்கு மேலும் கவலையை ஏற்படுத்தியது, அதேசமயம் அடுத்துவரும் ஜோ பிடன் நிர்வாகத்தில் அமெரிக்காவின் எதிர் புலனாய்வு நடவடிக்கைகள் முக்கிய காரணமாக அமையும்.