டெல்லி : கொரோனா வைரஸ் மீண்டும் பரவும் காரணத்தினால் இந்தியா மற்றும் சில நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டினரை நிறுத்திவைக்க முடிவெடுத்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் இருக்கும் சீன தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா தொற்றுநோய் காரணமாக, செல்லுபடியாகும் சீன விசாக்கள் அல்லது குடியிருப்பு அனுமதிகளை வைத்திருக்கும் இந்தியாவில் உள்ள வெளிநாட்டினர் சீனாவிற்குள் நுழைவதை தற்காலிகமாக நிறுத்த சீனா முடிவு செய்துள்ளதாக இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்தியாவில் உள்ள சீன தூதரகம் மேலே குறிப்பிடப்பட்ட விசா அல்லது குடியிருப்பு அனுமதிகளை வைத்திருப்பவர்களுக்கு சுகாதார அறிவிப்பு படிவங்களில் முத்திரையிடாது.
இராஜாங்க ரீதியிலான விசாக்கள், சேவை, மரியாதை மற்றும் சி விசாக்களை வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் இதில் பாதிக்கப்படமாட்டார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரகால அல்லது மனிதாபிமான தேவைகள் உள்ள வெளிநாட்டவர்கள் இந்தியாவில் உள்ள சீன தூதரகங்களில் விசா விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இது தற்போதைய தொற்றுநோயைச் சமாளிக்க எடுக்கப்பட்ட தற்காலிக நடவடிக்கை மட்டுமே என்று தூதரகம் சார்பாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த நடவடிக்கை தற்காலிகமானது என்றும் எதிர்கால விசாக்கள் பாதிக்கப்படாது என்று இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு மட்டுமல்ல வேறு பல நாடுகளிலும் இதே போன்ற நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் பின்னணியில், உலகளவில் கொரோனா கேஸ்கள் அதிகரிப்பது குறித்த சீனா கவலைகள் இருப்பதாகத் தெரிகிறது. குளிர்காலம் வருவதால் நிலைமை மோசமடைய கூடும். ஆனால் அத்யாவசிய பயணங்களுக்காக சீனாவில் இருந்து வருவதற்கும், சீனாவுக்கு செல்வதற்கும் வழி செய்து கொடுக்கும் வகையில் இந்திய அரசாங்கம் சீனாவுடன் தொடர்பில் உள்ளது.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடு இந்தியா. கடந்தாண்டு இறுதியில் சீனாவில் வைரஸ் தீவிரமடைய தொடங்கியவுடன். நாட்டிற்குள் நுழையவும் அல்லது பிற மாகாணங்களுக்கு பயணம் மேற்கொள்ளவும் கடுமையான பயண கட்டுப்பாடுகள் மேற்கொண்ட பிறகே தொற்று பரவலை கட்டுப்படுத்த முடிந்தது. இப்போது உலகம் முழுவதும் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி வருவதை தொடர்ந்து மீண்டும் அது போன்ற ஒரு நடவடிக்கையை சீனா மேற்கொண்டுள்ளதாவும் கூறியுள்ளனர்.
பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம், பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கும் இதே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.