ஐக்கிய நாடுகள் சபையில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட ஐநாவின் அமைதி படையில் சீனா தன்னுடைய துருப்புகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
சர்வதேச அளவில் தன்னை மிக முக்கியமான நாடக காட்டிக்கொள்ள சீனா கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. பொருளாதார ரீதியாக வலுப்பெற்றாலும், மறுபக்கம் ராணுவத்தையும் பலப்படுத்தி வருகிறது. இப்போது ராஜாங்க ரீதியிலான நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. ஏற்கனவே உலக சுகாதார மையத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என்கிற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் இப்போது ஐநாவிலும் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட முடிவெடுத்துள்ளது. அதன்படி ஐநாவின் அமைதி படையில் இருக்கும் தன்னுடைய துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சீனா முடிவெடுத்துள்ளது என்று அரசின் உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா. அமைதி படை
சீனாவின் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் ஐ.நா. அமைதி படையில் இந்தியாவின் பங்களிப்பை குறைப்பதாகும். இந்திய படைகளை விட இரண்டு மடங்கு படை வீரர்களை அனுப்ப சீனா விரும்புகிறது. ஐநாவின் படையில் இந்திய ராணுவத்துக்கு எப்போதுமே தேவை அதிகம் இருந்துள்ளது, பலதரப்பு சமாதான நடவடிக்கைகளில் அதிக வீரர்களை அனுப்பிய சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியா தற்போது 5,424 வீரர்களை ஐநாவின் படையில் பணியமர்த்தியுள்ளது. இதுவரை மொத்தமாக 52 நாடுகளில் 71 ஐநாவின் பணிகளில் பணியாற்ற இந்தியா 2 லட்சம் வீரர்கள் வரை அனுப்பியுள்ளது.
அதேசமயம் தற்போது 2,548 சீன வீரர்கள் தான் ஐநாவின் அமைதி படையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்போது மேலும் எட்டாயிரம் படை வீரர்களை அனுப்ப பீஜிங் திட்டமிட்டுள்ளது. ஐநா பணிகளுக்கு படைகளை அனுப்புவதில் சீனா இப்போது எட்டாவது இடத்தில் உள்ளது. இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதில் 6,726 படை வீரர்களை அனுப்பி பங்களாதேஷ் முதல் இடத்திலும், எத்தியோப்பியா, ருவாண்டா, நேபாளம் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன. இதில் முதலிடத்தை பிடிக்க தான் சீனா தீவிரமாக முயன்று வருகிறது. இருப்பினும் தொழில்முறை அடிப்படையில் மோசமான பெயரைக் கொண்டிருப்பதால் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவ வீரர்களை களமிறக்குவது எவ்வளவு பயனுள்ளதாக இருக்க போகிறது என்பது கேள்விக்குறி என்று அரசு உயர்மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.
சீன படை
2016 ஆம் ஆண்டு தெற்கு சூடானில் முக்கியமான சூழலில் சீன படையினர் அவர்களுடைய நிலையை அப்படியே கைவிட்டு சென்றுவிட்டனர். இரண்டு அரசியல் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது அவர்களுடைய நிலை தாக்கப்பட்ட பின்பு பி.எல்.ஏ. துருப்புக்கள் வேறு இடத்திற்கு சென்றுவிட்டதால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவ அவர்கள் தவறிவிட்டனர் என்றும் கூறப்படுகிறது. மேலும், கடந்த பத்தாண்டுகளில் இந்திய இராணுவத்தின் புகழ் அதிகரித்து வருகிறது, 2018 ஆம் ஆண்டில் லெபனானில் முதன்முறையாக வெளிநாட்டு படை வீரர்கள் ஒரு இந்திய பட்டாலியனின் கீழ் பணியாற்றத் தொடங்கினர்.
மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் இந்தியா சுமார் 5500 படை வீரர்களை கொண்டுள்ளது, இவர்கள் மோதல் நடைபெறும் பிராந்தியங்களில் அமைதியை நிலைநாட்ட அயராமல் உழைக்கின்றனர் என்று மேஜர் ஜெனரல் எம்.கே. கட்டியார் கூறியுள்ளார். 13 ஐநாவின் பணிகளில் இந்தியா எட்டில் பங்கெடுத்துள்ளது. இந்திய ராணுவம் தனது படைகளை லெபனான், தெற்கு சூடான், காங்கோ மற்றும் கோலன் ஹைட்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஐ.நா அமைதிகாக்கும் பணிக்காக அனுப்பியுள்ளது. மேலும் பெண் அதிகாரிகளையும் இந்தியா அனுப்பியுள்ளது. தற்போது இருக்கும் 104 அதிகாரிகளில், சுமார் 15 பெண்கள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.