சென்னை: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசியை பரிசோதனையின் போது போட்டுக்கொண்ட சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு அதன்பின் மோசமான சில பக்க விளைவுகள் ஏற்பட்டதாக கூறி 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சட்ட ரீதியாக நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸை தடுக்க கூடிய நம்பகமான தடுப்பூசியை உருவாக்க தீவிரமாக முயற்சி செய்துகொண்டு உள்ளனர். இதில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் இறுதி கட்டத்தையும் எட்டியுள்ளன. உலக வரலாற்றிலேயே ஓரு குறிப்பிட்ட வைரஸ்க்கு எதிரான தடுப்பு மருந்தை இவ்வளவு குறுகிய காலத்திற்குள் உருவாக்கியது இதுவே முதல் முறை. ஆனாலும் இதிலும் ஏற்பட்ட போட்டியின் காரணமாக சில நிறுவனங்கள் பரிசோதனையை போதுமான அளவு நடத்தாமலேயே முடிவுகளை வெளியிட்டு வந்தது.
இதில் ஆரம்பத்தில் இருந்தே நம்பிக்கை கொடுக்க கூடியதாக இருப்பது, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி தான். இது இப்போது இறுதிக்கட்ட மனித பரிசோதனையில் உள்ளது. உலகின் பல நாடுகளிலும் இதன் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களில் இதன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவை சேர்ந்த சீரம் நிறுவனம் இதை பெருமளவில் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
என்ன நடந்தது ?
இந்த நிலையில் தான், சென்னையை சேர்ந்த 40 வயதாகும் தொழிலதிபர் ஒருவர் இந்த பரிசோதனையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு தனக்கு மோசமான பக்க விளைவுகள் ஏற்பட்டதாக கூறி, அவர் சார்பாக சென்னையைச் சேர்ந்த ஒரு சட்ட நிறுவனம், இப்போது ஐ.சி.எம்.ஆர், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல், மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, அஸ்ட்ரா ஜெனெகா தலைமை நிர்வாக அதிகாரி, ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனையின் தலைமை ஆய்வாளர் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திர உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஆண்ட்ரூ பொல்லார்ட் ஆகியோருக்கு சட்ட ரீதியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டிஸில் இடம்பெற்ற தகவலின் அடிப்படையில், கடந்த அக்டோபர் 1ம் தேதி சம்பத்தப்பட்ட நபர் சென்னையில் இருக்கும் ஸ்ரீ ராமச்சந்திர உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனதில் ஆக்ஸ்போர்டு- ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையை மேற்கொண்டார். அடுத்த 10 நாட்கள் சாதாரணமாக தான் இருந்திருக்கிறார். ஆனால் அக்டோபர் 11 ஆம் தேதி, அவர் கடுமையான தலைவலியை அனுபவிக்கத் தொடங்கினார். அன்று முழுவதும் அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டது. அவருடைய நடத்தையில் மொத்தமாக மாற்றம் இருப்பதாக பாதிக்கப்பட்டவரின் மனைவி கூறியிருக்கிறார். மேலும் வெளிச்சம் மற்றும் சத்தங்கள் மீது அதிகப்படியான எரிச்சலை காட்டியுள்ளார். தன்னுடைய படுக்கையில் இருந்து எழுந்துகொள்ளவே விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறார்.
அதன் பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவெடுத்த அவருடைய மனைவி ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவக் கல்லூரிக்கு ஆம்புலன்சில் அழைத்து செல்லும் வழியிலேயே மீண்டும் வாந்தி எடுத்துள்ளார். அவர் நினைவுடன் தான் இருந்தார் ஆனால் அவரால் யாரையும் அடையாளம் காணமுடியவில்லை. அதன் பின்னர் அக்டோபர் 29 வரை மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றிருக்கிறார். அக்டோபர் 1 ஆம் தேதி அவர் எடுத்த சோதனை தடுப்பூசியின் தீவிர பக்க விளைவு தான் அக்டோபர் 11ம் தேதிக்கு பிறகு அவர் அனுபவித்த கடுமையான நியூரோ என்செபலோபதியின் காரணமாக அவர் சந்தித்த கடுமையான அதிர்ச்சி உள்ளிட்டவைகளுக்கு காரணம் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இப்போது குணமடைந்து விட்டாலும் முழுமையாக சரியாகவில்லை, இப்போதும் அவருக்கு எதிலும் கவனத்தை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். மேலும் இது குறித்து, ICMR அல்லது சீரம் நிறுவனம் உடன்பட யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நபர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனுபவித்த இன்னல்களுக்கு நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்கப்பட்டு அந்த நோட்டிஸ் அனுப்ப பட்டிருந்தது. மேலும் அதில் உடனடியாக இந்த தடுப்பூசியின் உற்பத்தி மற்றும் பரிசோதனையை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளபட்டு இருந்தது.
நிறுவனத்தின் பதில் என்ன ?
இந்த நிலையில் இந்த நிகழ்வு குறித்து கருத்து கூறியுள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம், அந்த நோட்டிஸில் குறிப்பிடப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் தவறான எண்ணம் கொண்டவை, அவருடைய மருத்துவ நிலை குறித்து அனுதாபம் கொண்டிருந்தாலும் அதற்கும் தடுப்பூசி சோதனைக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என மறுத்துள்ளது. மருத்துவ குழுவினரால் ஏற்கனவே அவர் செய்துகொள்ள இருக்கும் தடுப்பூசி பரிசோதனையால் ஏற்படும் சிக்கல்கள் அவர் சார்ந்து தனிப்பட்டவை என்று விளக்கப்பட்டுள்ளன இதனால் இப்போது அவர் கேட்பது உள்நோக்கம் கொண்டது என்றும் கூறியுள்ளது. இதன் காரணமாக சீரம் நிறுவனம் அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்து 100 கோடி நஷ்ட ஈடு கேட்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேறு யாருக்கும் ஏற்பட்டுள்ளதா ?
இந்த அறிக்கையை பொதுவாக பார்த்தால் தடுப்பூசியின் மீதான அச்சம் ஏற்படலாம், ஆனால் உண்மையில் எந்த ஒரு தடுப்பூசியும் 100 சதவிகிதம் பக்க விளைவுகள் அற்றது அல்ல என்று கூறுகிறார்கள் வல்லுநர்கள். ஆனால் நாம் இப்போது பயன்படுத்தும் பெரும்பாலானவை பாதுகாப்பானது தான். சிலருடைய உடல் ரீதியாக சில பக்க விளைவுகள் ஏற்படுவது இயல்பு தான் என்கிறார்கள். அப்படியான பக்க விளைவுகள் மூலம் தான் அதில் இருக்கும் குறைகளை கண்டறிய முடியும். ஆனால் நிச்சயம் அவை பெரிய ஆபத்தான பக்க விளைவுகளாக இருக்காது, ஏனெனில் அப்படியான மருந்துகளுக்கு அரசாங்கங்களும் அனுமதி வழங்காது.
மாடெர்னா நிறுவனத்தின் தடுப்பூசி பரிசோதனைக்கு பிறகு ஒருவருக்கு அதிகப்படியான காய்ச்சல் மற்றும் கடும் குளிர் ஏற்பட்டுளள்து. அதுமட்டுமல்ல, கடந்த மே மாதம் இதே நிறுவனத்தின் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட ஒரு தன்னார்வலர் மிகவும் சோர்வாக உணர்ந்திருக்கிறார். மேலும் குமட்டல், வயிற்றுப் பிடிப்புகள், வாந்தி உள்ளிட்டவையும் ஏற்பட்டுள்ளது. அதேபோல ஃபைசர் நிறுவனத்தின் ஆய்வின் ஒரு பகுதியாக இருந்த தன்னார்வலர்களில் ஒருவர், தடுப்பூசிக்குப் பிறகு மோசமான ஒற்றைத் தலைவலி வலியை உணர்ந்ததாக கூறியுள்ளார். மற்றும் சில முன்னணி தடுப்பூசி சோதனைகளுக்கு தானாக முன்வந்த தன்னார்வலர்கள் சிலருக்கு லேசான, நீடித்த மற்றும் குறுகிய நேரங்களில், முற்றிலும் வித்தியாசமான பக்க விளைவுகளும் ஏற்பட்டுள்ளது.
என்னென்ன பின் விளைவுகள் இருக்கும் ?
கொரோனா வைரஸ் தடுப்பூசியை பரிசோதனையின் போது சாதாரணமாக போட்டுகொண்டு சென்றுவிட முடியாது. நிச்சயம் சிலருக்கு இதனால் அலர்ஜி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். அதே போல தலைவலி பொதுவான பக்க விளைவுகளாக பார்க்கப்படுகிறது. எந்தவொரு நோய்த்தொற்றுக்கும் எதிராக, எந்த நேரத்திலும் தடுப்பூசி பெறுவோரில் 50% க்கும் அதிகமான மக்கள் லேசான, மிதமான அளவிலான தலைவலியை அனுபவிப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மன அழுத்தம், அனைத்திலும் எரிச்சல், மயக்கம், குமட்டல் மற்றும் வாந்தி, தசை வலி மற்றும் புண் ஆகியவையும் ஏற்படலாம்.
தடுப்பூசி போடப்பட்ட இடத்தை சுற்றி தசையில் வலி, அல்லது புண் ஏற்படுவது பொதுவான நிகழ்வு என்கின்றனர். மற்றும் ஒற்றை தலைவலி, தலை சுற்றல் போன்ற சாதாரண பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படியான பரிசோதனைகளும், பக்க விளைவுகளுக்கும் பிறகு தான் உலகின் பல கொடிய வைரஸ்களுக்கு எதிரான பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்க பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.