Tuesday, March 28, 2023
Homeசெய்திகள்2015 வெள்ளத்துக்கு பிறகு.. மீண்டும் திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி.. ஆபத்து வருமா?

2015 வெள்ளத்துக்கு பிறகு.. மீண்டும் திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி.. ஆபத்து வருமா?

சென்னை : நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டடுள்ளது.

நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. வாங்க கடலில் உருவான இந்த புயல் அதிதீவிர புயலாக மாறி இன்று நள்ளிரவு காரைக்கால் மாமல்லபுரம் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் சென்னையில் கடந்த சில நாட்களாக விடாமல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக வேளச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளது.

இந்த நிலையில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வந்தது. அதன் முழு கொள்ளளவான 24 அடியில் 21.5 அடியை எட்டியுள்ளது. விரைவிலேயே முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 4000 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 150 முதல் 200 மி.மீ. மழை பெய்யும் என்று மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விடுவதாக தமிழக அரசு இன்று காலை அறிவித்தது. அதன் படி இன்று மதியம் 12 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருக்கும் 19 மதகுகளில் 7 மதகுகளில் உபரி நீர் திறந்து விடப்பட்டது. முதல் கட்டமாக ஆயிரம் கன அடி நீர் வரை திறக்கப்பட்டுள்ளது. படிப்படியாக அதன் அளவு அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி முழுதாக நிரம்பி கடைசியாக திறக்கப்பட்டது 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட சென்னை பெரு வெள்ளத்தின் போது தான். அப்போது ஒரே இரவில் மொத்தமாக 1 லட்சம் காண அடி நீர் வரை திறக்கப்பட்டதால் ஒட்டுமொத்த சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. அன்றில் இருந்து இப்போது வரை செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு அதிகரித்தாலே சென்னை மக்கள் மத்தியில் பீதி ஏற்பட தொடங்கி விடும். கிட்ட தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினாலும் பயப்பட வேண்டியதில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டால் தான் 2015 போன்ற வெள்ளம் ஏற்படும், இப்போதைய நிலையில் அதற்கான வாய்ப்பு இல்லையென்றும் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். இருப்பினும் கரையோர பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை செம்பரம்பாக்கத்தில் திறந்துவிட படும் தண்ணீர், ராமாபுரம், ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், அடையார், பட்டினப்பாக்கம் வழியாக செல்லும். 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த பகுதிகள் தான் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.