மாண்ட்ரியல் : கனடா நாட்டில் ஒருவருக்கு அரியவகை பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் அவர் உடனே தனிமைப்படுத்தப்பட்டு விட்டார் என்றும் கூறியுள்ளனர்.
உலகமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிக மோசமாக அவதிப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அவ்வப்போது சில புதிய வகை வைரஸ்கள் சீனா மற்றும் உலகின் சில பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்துவது மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களில் சீனாவில் டிக் போர்ன் வைரஸ், மற்றும் கேட் க்யூ வைரஸ் போன்ற வைரஸ்கள் பரவ தொடங்கின. அந்த வகையில் இப்போது கனடாவில் அறிய வகை எச்1 என்2( H1N2) வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இது அரியவகை பன்றி காய்ச்சலாகும்.
மேற்கு அல்பர்ட்டா மாகாணத்தில் அக்டோபர் மத்தியில் ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அல்பர்ட்டா பகுதி மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் சுகாதாரத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் பருவ காலங்களில் இதுவரை அல்பர்ட்டாவில் பதிவான ஒரே இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு இது மட்டும் தான் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
பெயர் வெளியிடப்படாத அந்த நோயாளிக்கு இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகள் இருப்பதை அறிந்து உடனடியாக அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு H1N2 வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதும் உடனடியாக அதற்கான சிகிச்சை அவருக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. மேற்கொண்டு இது பரவ வாய்ப்பில்லை என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கனடா நாட்டின் சுகாதாரத்துறை இந்த வைரஸ் எங்கிருந்து பரவியது என்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அது வேறு யாருக்கும் பரவவில்லை என்பதை உறுதி செய்யும் நடவடிக்கையிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த H1N2 ஸ்ட்ரெயின் உணவு பொருட்கள் மூலம் பரவ கூடியது கிடையாது. இதனால் பன்றி இறைச்சி அல்லது அது சார்ந்த உணவை சாப்பிட்டதன் மூலம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது. 2005 க்கு பிறகு உலகம் முழுவதுமே இதுவரை 27 பேருக்கு மட்டுமே இந்த H1N2 வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது வழக்கமாக வரும் பன்றி காய்ச்சலான H1N1 வகை கிடையாது. இந்த வகை வைரஸ் பாதிப்பு கனடாவில் தற்போது யாருக்கும் இல்லை.
கனடாவின் பொது சுகாதாரத்துறையின் தலைமை அதிகாரி இதுபற்றி கூறுகையில், “இது மனிதர்களுக்கு ஏற்படும் ஒரு அரிய வகை காய்ச்சல், பொதுவாக பன்றிகளில் இருந்து வெளிப்பட்டிருக்கலாம். மனிதர்களிடம் இருந்து பிற மனிதர்களுக்கு எளிதில் பரவக்கூடியதா என்பது உறுதிசெய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.