பெங்களூரு : இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவரை போலீசார் நிறுத்தி வழக்கமான சோதனைகள் செய்த போது அவரிடம் 2 மீட்டர் நீளமுள்ள அபராத ரசீதை வழங்கியுள்ளனர். பைக் வாங்கியதை விட இரண்டு மடங்கு அபராத தொகையை பார்த்த அந்த இளைஞரின் தலையே சுற்றியுள்ளது.
பெங்களூரின் மடிவாளா பகுதியில் வசித்து வருபவர் அருண் குமார். இவர் சமீபத்தில் 20 ஆயிரம் ரூபாயில் செகண்ட் ஹேண்டில் பைக் வாங்கியுள்ளார். அதில் இன்று காலை வெளியே சென்று கொண்டிருந்த பொழுது காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர் வழக்கமான சோதனையின் போது அருண்குமாரை நிறுத்தியிருக்கிறார். அப்போது வண்டியின் நம்பர் பிளேட்டை வைத்து சோதனை செய்ததில் 77 போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்குகள் அதன் மீது பதிவாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து உடனடியாக அந்த காவல்துறை ஆய்வாளர் 2 மீட்டர் நீளத்தில் ஒரு அபராத சீட்டை எடுத்து அருண்குமாரிடம் கொடுத்துள்ளார். அதில் 42,500 ரூபாய் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த அருண்குமார் அதிர்ந்து போனார். பைக் வாங்கியதை விட இரண்டு மடங்கு அபராத தொகை விதித்த இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களிலும் வைரலாகியுள்ளது. இதுமாதிரி அதிகப்படியான அபராதம் விதிக்கப்படுவது இது முதல்முறை கிடையாது. ஜனவரி மாதம் போர்ஷே 911 காரின் உரிமையாளர் ஒருவர் 27.68 லட்சம் அபராதம் செலுத்தினார். இந்த காரில் போதிய ஆவணங்கள் இல்லாததற்கும், 2017 முதல் பதிவு செய்யப்படாமல் வைத்திருந்ததாகவும் அபராதம் விதிக்கப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில், உத்தரபிரதேசத்தின் அலிகரைச் சேர்ந்த ஒருவர் கடந்த ஆண்டு செப்டம்பரில் கார் ஓட்டும் போது ஹெல்மெட் அணிந்திருந்தார். பின்னர் பியூஷ் வர்ஷ்னி என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் ஒருமுறை தான் காரில் செல்லும் போது ஹெல்மெட் அணியவில்லை என்று அதிகப்படியான அபராதம் விதிக்கப்பட்டதால் அன்றிலிருந்து தாம் கார் ஓட்டும் பொழுதும் ஹெல்மெட் அணிவதாக கூறியிருக்கிறார்.