டாக்கா: சுமார் 1500 ரோஹிங்கியா அகதிகளை 20 வருடத்திற்கு முன்பு உருவான தனி தீவிற்கு அனுப்ப வங்கதேசம் அரசு முடிவெடுத்துள்ளது. இந்த தீவுகள் பெரும்பாலும் பருவமழையின் போது மூழ்கிவிடும் அபாயம் நிறைந்தவை. இத்தகைய ஒரு இடத்தில் அகதிகளை கொண்டுபோய் விடும் அரசின் நடவடிக்கைக்கு ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மியான்மரில் இருந்து லட்சக்கணக்கான அகதிகள் வங்கதேசத்தில் தங்கியுள்ளனர். குறிப்பாக 2017 ஆம் ஆண்டு ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு பிறகு மக்கள் கூட்டம் கூட்டமாக அப்பகுதிகளை விட்டு அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.சிறுபான்மை ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு மியான்மரில் குடியுரிமை மறுக்கப்பட்டதும், பெரும்பான்மையினரால் அவர்களுடைய நிலங்கள் சூறையாடப்பட்டது, அப்பாவிகள் கொல்லப்பட்டது, பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளது உள்ளிட்ட காரணங்களினால் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக சென்று சேர்ந்தனர். அப்படி அந்த சமயங்களில் மட்டும் மியான்மரில் இருந்து கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் அகதிகளாக வங்கதேசத்தில் அடைக்கலம் தேடினர்.
கடந்த நவம்பர் மாதம் அவர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்ப வங்கதேச அரசு முயற்சி எடுத்தது, ஆனால் அதற்கு பெரும்பான்மையான மக்கள் திரும்பி செல்ல மறுத்துவிட்டனர். இதற்கிடையே ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகிய குற்றச்சாட்டுகளில் மியான்மரின் உயர்மட்ட இராணுவத் தளபதிகள் மீது வழக்குத் தொடர 2018 ஆம் ஆண்டு ஐநாவின் விசாரணை கமிஷன் பரிந்துரை செய்தது.
20 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய தீவு:
இந்த நிலையில் தான் வங்கதேசத்தில் இருக்கும் ரோஹிங்கிய அகதிகளை தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தீவுக்கு அந்நாட்டு அரசாங்கம் அனுப்பியுள்ளது. வங்கதேச நிலப்பரப்பில் இருந்து 34 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த தீவு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தான் தோன்றியது. ஆனால் அங்கு இதுவரை மக்கள் யாரும் தங்கியது கிடையாது. முதல்கட்டமாக அங்கு 1642 பேர் அனுப்பப்படுகின்றனர். அவர்கள் சிட்டகாங் துறைமுகத்தில் இருந்து வங்கதேச கடற்படைக்கு சொந்தமான ஏழு கப்பல்களில் அனுப்பி வைக்கப்பட்டனர் என்று கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மூன்று மணிநேர கடல் பயணத்திற்கு பிறகு அவர்கள் அங்கு சென்று சேருவர். முன்பு இந்த தீவு பருவமழை காலங்களில் அடிக்கடி நீரில் மூழ்கிவிட கூடிய பகுதியாகும். இப்போது அங்கு வங்கதேச கடற்படையால் 112 மில்லியன் டாலர் செலவில் வெள்ளபாதுகாப்பு கட்டிடங்கள், வீடுகள், மருத்துவமனைகள், மற்றும் மசூதிகள் கட்டப்பட்டுள்ளன.
அகதிகளுடன் பயணம் செய்த பங்களாதேஷ் பத்திரிகையாளர் நோமன் கூறும்பொழுது, அகதிகளின் உடல் வெப்பநிலை சுகாதார ஊழியர்களால் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக அளவிடப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மதிய உணவுக்கு அரிசி, முட்டை மற்றும் கோழிகள் வழங்கப்பட்டது. மேலும் அவர்கள் கப்பல்களில் ஏறுவதற்கு முன்பு COVID-19 க்கு எதிராக பாதுகாக்க முகமூடிகளும் வழங்கப்பட்டன. அந்த தீவில் சுமார் 1 லட்சம் மக்களை தங்கவைக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. இதனால் வங்கதேசத்தில் இருக்கும் லட்சக்கணக்கான அகதிகளில் ஒரு பிரிவினர் மட்டும் இங்கு அனுப்பப்படுவர். தற்போது அவர்கள் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் இருக்கும் நெரிசலான மோசமான அகதிகள் முகாம்களில் வசித்து வருகின்றனர்.
வங்காள விரிகுடா கடலில் அமைந்திருக்கும் இந்த தீவிற்கு இடம்பெயரலாமா என்பது குறித்து அகதிகள் சுதந்திரமாக முடிவெடுக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று ஐநா கவலை தெரிவித்துள்ளது. ஆனால் அகதிகளின் பாதுகாப்பு குறித்து சர்வதேச சமூகம் கவலைப்பட ஒன்றுமில்லை என்று உள்கட்டமைப்பு மேம்பாட்டு இயக்குநர் அப்துல்லா அல் மாமுன் சவுத்ரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தீவிற்கு சென்று பார்த்த பின் ஒட்டுமொத்த ஏற்பாடுகள் குறித்தும் ஐநா மற்றும் சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார். அகதிகளை ஏற்றி சென்ற 11 பயணிகள் பேருந்துகள் தீவுக்கு செல்லும் வழியில் தென்கிழக்கு நகரமான சிட்டகாங்கில் உள்ள பள்ளி கட்டிடங்களில் ஒரு இரவு முகாமிட்டனர். ஆனால் இந்த அகதிகளை இடம்பெயர்வுக்கு எதன் அடிப்படையில் தேர்வு செய்தார்கள் என்று அதிகாரிகள் யாரும் கூறவில்லை.
தீவின் உள்கட்டமைப்பு:
இது சம்பத்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் கூறும்பொழுது, அந்த தீவின் உள்கட்டமைப்பு ஒரு நவீன நகரத்தை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது, பல குடும்பங்களுக்கான கான்கிரீட் வீடுகள், பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் சாலைகள் உள்ளன. மேலும் இங்கு சூரிய மின்சக்தி வசதிகள், நீர் வழங்கல் அமைப்பு மற்றும் புயல் காப்பகங்களையும் கொண்டுள்ளது என்று கூறியுள்ளனர். இருப்பினும் 2015 ஆம் ஆண்டு முதன்முதலில் இந்த திட்டம் முன்மொழியப்பட்ட போதே சர்வதேச மனித உரிமை அமைப்புகள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்டவை இந்த இடப்பெயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு பெரிய புயல் ஏற்பட்டால் தீவை மூழ்கடித்து ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு ஆபத்து நேரிடும் என்கிற அச்சத்தை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இடமாற்றம் திட்டத்தை ரத்து செய்யுமாறு அம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியவை வங்கதேச அரசை வலியுறுத்தியது.
காக்ஸ் பஜார் நகருக்கு அருகிலுள்ள தற்போதைய அகதிகள் முகாம்கள் மிகவும் நெரிசலானவை மற்றும் சுகாதாரமற்றவை. நோய் தாக்குதல் மற்றும் தொடர் குற்றங்கள் பரவலாக உள்ளன. மேலும் அங்கு கல்வி குறைவாக உள்ளது, அகதிகள் வேலை செய்யவும் அனுமதிக்கப்படுவதில்லை. இவ்வளவும் இருந்த போதிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக பெரும்பாலான அகதிகள் மியான்மருக்கு திரும்பி செல்ல விரும்பவில்லை. அதே நேரம் யாரெல்லாம் புதிய தீவுக்கு இடம்பெயர்ந்து செல்ல தயாராக இருக்கிறார்கள் என்கிற விவரங்களும் அதிகாரிகளிடம் இல்லை என சொல்லப்படுகிறது. இதுகுறித்து கூறிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நட்பு நாடுகளிடம் குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னர் தன்னுடைய நிர்வாகம் அவர்களிடம் ஆலோசனை நடத்துவதாகவும், எந்த அகதிகளும் கட்டாயமாக செல்ல வேண்டிய நிலை ஏற்படாது என்று பலமுறை தெரிவித்துவிட்டதாக கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.