சென்னை: தமிழகத்தில் 71 பிஎட் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதித்துள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 7 அரசு, 14 அரசு உதவி பெறும் மற்றும் 700 தனியார் கல்வியியல் கல்லூரிகள் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் பி.எட், எம்.எட். படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
உரிய கட்டமைப்பு வசதி இல்லாததால் தமிழகத்தில் 58 கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) அறிவித்தது.
மேலும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெறாத கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கும் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம்(NCTE) தடை விதித்துள்ளது.
ஆகையால், 2020-2021 கல்வியாண்டில் மொத்தம் 71 கல்லூரிகளில் பி.எட், எம்.எட் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள் சேர்க்கைக்கு தடை செய்யப்பட்ட கல்லூரிகளின் பட்டியலை தனது அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளதாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும், தடை விதித்த கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்தால் பல்கலைக்கிழகம் பொறுப்பேற்காது என்றும் தெரிவித்துள்ளது.