Thursday, June 1, 2023
Homeசெய்திகள்சட்டசபை விவகாரம்; தமிழக ஆளுநரை கண்டுகொள்ளாத திருச்சி, தஞ்சை மேயர்கள்…! என்னதான் நடந்தது…?

சட்டசபை விவகாரம்; தமிழக ஆளுநரை கண்டுகொள்ளாத திருச்சி, தஞ்சை மேயர்கள்…! என்னதான் நடந்தது…?

ஆளுநர் உரையுடன் தொடங்கிய தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் பல வார்த்தைகளையும், வரிகளையும் படிக்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் பேசிக்கொண்டே இருந்தபோது எழுந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புறக்கணித்த தி.மு.க. மேயர்

சட்டசபையில் இருந்து பாதியிலே வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சரமாரியான கண்டனங்களை தி.மு.க.வினரும். கூட்டணி கட்சியினரும் பதிவிட்டனர். ஆளுநரின் செயலலை கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தையும் வி.சி.க. அறிவித்துள்ளது.

இந்த சூழலில் தான் திருச்சி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்க திமுக மேயர் அன்பழகன் செல்லாதது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் தொழில் முனைவோர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காகவும், திருவையாறு தியாகராஜா ஆராதனை விழாவில் பங்கேற்பதற்காகவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றார்.

அரசுடன் மோதல்

சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் மாலை 5.45 மணியளவில் ஆளுநர் திருச்சி விமான நிலையம் வந்தார். அங்கு அவரை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். ஆனால், சட்டசபையில் ஆளுநருக்கும், அரசுக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில் திருச்சி மேயர் அவரை வரவேற்க செல்லவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி வரும் ஆளுநருக்கு தமிழ் அமைப்புகள் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதையொட்டி திருச்சி விமான நிலையத்தை சுற்றிலும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் விமான நிலையத்திலிருந்து இருந்து தஞ்சாவூர் வரை வழி நெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கண்டு கொள்ளாத தஞ்சை மேயர்

தஞ்சாவூர் சென்ற ஆளுநரை வரவேற்க தஞ்சை மேயர் ராமநாதனும் வரவில்லை என்று கூறப்படுகிறது. தமிழக ஆளுநர் சட்டசபையில் நடந்து கொண்ட விதத்திற்கு பிறகு அவரை திரும்ப பெற வைப்பதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. டெல்லியில் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து அவரை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கையில் தி.மு.க. நிர்வாகிகள் கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் இனி ஆளுநரை புறக்கணிக்க தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.