தெஹ்ரான் : ஈரான் அணுசக்தி விஞ்ஞானி மொஹ்சின் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டிருப்பது பல்வேறு விவாதங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக அமெரிக்க குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்த படுகொலை சம்பவம் முக்கியத்துவம் பெறுகிறது.
இவருடைய படுகொலையால் ஈரான் கொதித்து போய் உள்ளது. இதற்கு இஸ்ரேல் தான் கரணம் என்றும் கூறியுள்ளது. மொஹ்சென் ஃபக்ரிசாதே ஈரானின் அணு ஆயுத திட்டத்தை முன்னெடுத்து செயல்படுத்தி வருவதாக சொல்லப்பட்டது. ஒபாமாவின் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மீறி ஈரான் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் குற்றம்சாட்டி வந்தன. இதற்கிடையே ஃபக்ரிசாதேவை கொலை செய்ததாக இஸ்ரேல் மீது ஈரான் வைத்த குற்றச்சாட்டுக்கு இதுவரை இஸ்ரேல் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
யார் இந்த மொஹ்சின் ஃபக்ரிசாதே?
ஈரானின் துணை ராணுவ அமைப்பான இஸ்லாமிய புரட்சிகர காவல்படையில் பிரிகேடியர் ஜெனரலாக இருந்தவர் அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே. இவர் அந்நாட்டின் அணு ஆயுத திட்டத்தில் முக்கிய நபராக செயல்பட்டு வருவதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு தலைநகர் தெஹ்ரானில் இருந்து 60 மெயில் தொலைவில் கிழக்கே அமைந்துள்ள அப்சார்ட் என்கிற பகுதியில் ஃபக்ரிசாதே மற்றும் அவருடைய மனைவி காரில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது, திடீரென வழிமறைத்த சிலர் சரமாரியாக காரின் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ஃபக்ரிசாதே மற்றும் அவருடைய மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்த நிகழ்வு ஈரானில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நிச்சயம் பலி வாங்கியே தீருவோம் என்று ஈரான் அதிபர் ரௌஹானி கூறியுள்ளார். மேலும் இந்த தாக்குதலை நடத்தியது இஸ்ரேல் தான் என்றும் ஈரான் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவியிருக்கலாம் என்று ஈரான் அதிகாரிகள் நம்புகின்றனர். அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ஈரானின் முக்கிய ராணுவ ஜெனரல் காசிம் சொலைமானி ஈராக்கில் வைத்து அமெரிக்காவின் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். அப்போதே ஈரான் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் இருந்தது. மத்திய கிழக்கில் அரசியல் மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்தவர் சொலைமானி, மற்றும் ஈரான் ராணுவத்தின் தூணாக இருந்தார். அவரை அமெரிக்கா கொன்றது அந்நாட்டுக்கு பேரிழப்பாக பார்க்கப்பட்டது. அவருடைய இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் தான் ஈரானின் மற்றுமொரு முக்கிய அதிகாரி கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என்று பிரிட்டனை சேர்ந்த நான்கு நபர்களின் புகைப்படங்களை ஈரான் வெளியிட்டுள்ளது. அவர்களை பிடிப்பதற்காக பல்வேறு தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இஸ்ரேல் இதுவரை இந்த கொலை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, ஆனால் இஸ்ரேலிய இரகசிய உளவு அமைப்பான மொசாட் தான், பலத்த பாதுகாப்புடன் இருந்த அணுசக்தி விஞ்ஞானி மீது துணிச்சலான தாக்குதலை நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்களில் பரவலாக செய்திகள் வலம்வருகின்றன.
ஏன் இந்த கொலை ? என்ன காரணம் ?
யாராக இருந்த போதிலும், இந்த கொலை ஏன் செய்யப்பட்டது? அதுவும் இப்போது ஏன் செய்யப்பட்டது என்கிற கேள்வி எழுகிறது. ஈரானுடன் அமெரிக்கா 2015 ஆம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தம் குறித்து புதிய அதிபராக பதவியேற்க இருக்கும் ஜோ பிடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியை தடுக்க வேண்டும் என்கிற இஸ்ரேலின் இந்த கடைசி முயற்சியாக கூட இது இருக்கலாம் என்று சில சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். 2015 ஆம் ஆண்டு ஒபாமா நிர்வாகத்தில் ஈரானுடன் ஒப்பந்தம் கையெழுத்தான போது ஜோ பிடன் துணை அதிபராக இருந்தார். மேலும் அவர் ஈரான்-அமெரிக்கா உறவை பழைய நிலைக்கு கொண்டு செல்வதற்கு ஆதரவாக இருப்பார் என்றும் கருதப்படுகிறது.
சில வல்லுனர்களின் கூற்று படி, ஈரான் இந்த நிகழ்வினால் கோபமடைந்து ராணுவ நடவடிக்கையை தொடங்கினால் ஆட்சி நிறைவடையும் தருவாயில் இருக்கும் டிரம்ப் நிர்வாகத்திற்கு ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது குண்டுகளை வீச போதுமான காரணங்களாக இருக்கும் என்று இஸ்ரேல் நம்புவதாக தெரிவித்துள்ளனர். டிரம்ப் கடந்த 2018 ஆம் ஆண்டே ஈரானுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிவிட்டார். மேலும் கடந்த மாதம் டிரம்ப் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புத்துறையின் முக்கிய அதிகாரிகள் அவசர கூட்டத்தில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு மையங்கள் மீது குறிவைத்து ராணுவ தாக்குதல் நடத்த டிரம்ப் விரும்பியதாக செய்திகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை டிரம்ப் அப்படியான நடவடிக்கை எதுவும் மேற்கொண்டிருந்தால் அது மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கும்.
ஆனால் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவு மற்றும் ஏற்கனவே டிரம்ப் நிர்வாகத்தால் போடப்பட்ட பொருளாதார தடைகளால் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கும் ஈரான் அரசாங்கம், டிரம்ப் நிர்வாகத்தின் மீதமுள்ள காலங்களும் நிறைவடையும் வரை காத்திருந்து அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்கவே முயற்சிக்கும். அதன் எதிரிகளை பொறுமையாக இருந்து மற்றொரு நாள் பழிவாங்க முடிவெடுக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதற்கு ஏற்றார் போலவே ஈரான் அதிபர் எந்த முடிவையும் அவசரகதியில் எடுக்க மாட்டோம் என்றும் கூறியிருக்கிறார்.
ஈரானின் அணுசக்தி திறன்கள்:
2010 மற்றும் 2012 க்கு இடைப்பட்ட காலத்தில் பல ஈரானிய அணு விஞ்ஞானிகளை இஸ்ரேல் கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. ஈரானின் அணுசக்தி அறிவானது போதுமான அளவு முன்னேறியுள்ளது என்றும் ஒருவேளை அணு ஆயுதங்கள் தயாரிக்க வேண்டும் என்று அந்நாடு முன்னேறினால் வெறும் படுகொலைகளால் அந்நாட்டின் லட்சியங்களை தடுக்க முடியாது என்றும் வல்லுநர்கள் கூறியுள்ளனர். அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியிருந்தாலும், ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து ஈரானை அதில் இணைந்திருக்க வைத்திருக்கிறது. முக்கியமாக, ஈரான் இன்னும் ஐ.நா. சர்வதேச அணுசக்தி அமைப்புடன் (ஐ.ஏ.இ.ஏ) ஒத்துழைத்து வருகிறது மற்றும் அதன் அணுசக்தி நிலையங்களில் ஆய்வு நடத்தவும் ஆய்வாளர்களுக்கு பரந்த அளவிலான அனுமதியை வழங்கியுள்ளது. அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே அணுசக்தியில் ஆர்வம் காட்டுவதாக ஈரான் நீண்ட காலமாக கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஈரான் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் படி 202.8 கிலோ தான் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்திருக்க வேண்டும், ஆனால் 2019 ஆம் ஆண்டு சர்வதேச அணுசக்தி அமைப்பு நடத்திய ஆய்வில் 2,442.9 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு வைத்திருந்ததாக தகவல் வெளியிட்டுள்ளது. அதேபோல, ஒப்பந்தத்தின்படி, சுத்திகரிக்கப்பட்ட யுரேனியத்தின் அணுப்பிளவின் தூய்மை 3.67% க்கு கீழ் இருக்க வேண்டும், ஈரான் அதை 4.5% வரை அதிகரித்துள்ளது. இதனால் ஈரான் ஒப்பந்தத்தின் வரம்புகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இப்போது அமெரிக்கா மற்றும் ஈரான் அதிகாரிகளுக்கு குடைச்சல் கொடுக்க கூடிய ஒரு முக்கிய கேள்வி, ஈரான் ஒரு அணு ஆயுதம் முழுமையாக உருவாக்க இன்னும் எத்தனை காலங்கள் எடுக்கும் ? சில மதிப்பீடுகளின் படி 4 மாதங்கள் முதல் ஒரு வருடங்கள் கூட ஆகலாம் என்று கூறப்படுகிறது அதே சமயம் சிறிய அளவிலான அணு ஆயுதமாக இருந்தாலும் அதை சுமந்து செல்லக்கூடிய ஏவுகணை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.