Tuesday, March 28, 2023
Homeசெய்திகள்உலகம்2068 ஆம் ஆண்டு பூமியை தாக்க வரும் சிறுகோள்.. ஹிரோஷிமாவை விட 65,000 மடங்கு அழிவை...

2068 ஆம் ஆண்டு பூமியை தாக்க வரும் சிறுகோள்.. ஹிரோஷிமாவை விட 65,000 மடங்கு அழிவை ஏற்படுத்தும்!

பூமியை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கும் சிறுகோள் ஒன்று இன்னும் 50 வருடங்களில் பூமி மீது மோதுவதற்கான சாதிய கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அவ்வாறு மோதும் பட்சத்தில் மிகப்பெரிய அழிவை அது ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பூமியை நோக்கி அபோபிஸ் என்கிற சிறுகோள் ஒன்று வேகமாக வந்துகொண்டிருக்கிறது. அபோபிஸ் என்றால் குழப்பங்களின் கடவுள் என்று அர்த்தம். 370 மீட்டர் விட்டம் கொண்ட இந்த சிறுகோள் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. 2068 ஆம் ஆண்டு அது பூமியை தாக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அது பூமியை தாக்கினால் 800 மில்லியன் TNT வெடிப்பிற்கு சமமான அழிவை ஏற்படுத்த சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹிரோஷிமாவில் அணுசக்தி குண்டு வெடிப்பால் ஏற்பட்ட பேரழிவை விட 65 ஆயிரம் மடங்கு அதிக பாதிப்பை இது ஏற்படுத்தும்.

இப்போது புதிய ஆய்வில் இந்த சிறுகோளின் வேகம் சூரிய வெப்பத்தினால் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த அபோபிஸ் சிறுகோள் யார்கோவ்ஸ்கி விளைவுக்குள் செல்கிறது. யார்கோவ்ஸ்கி விளைவு என்பது, ஒரு சிறுகோள் வேகமடையும் போது அதன் வெப்ப கதிர்வீச்சு ஒரே மாதிரியாக இல்லாததால், அதன் பாதையில் நீண்ட கால கணிப்புகளைச் செய்வது மிகவும் கடினம். அந்த விண்கல்லின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மற்ற பகுதிகளை விட வேகமாக வெப்பம் அதிகரிப்பது இதற்க்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இப்போது இந்த யார்கோவ்ஸ்கி விளைவிற்குள் அபோபிஸ் விண்கல் நுழைந்துள்ளதால் அது சூரிய வெப்பத்தினால் அதன் பாதை மாறுவதற்கும் வாய்ப்புள்ளது. ஆனால் அதன் வேகம் அதிகரித்துள்ளதால் 2068 ஆம் ஆண்டு பூமியின் மீது மோதுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் உள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த விண்கல் யார்கோவ்ஸ்கி விளைவிற்குள் நுழைந்தது குறித்து விஞ்ஞானி டேவ் தொலென் தலைமையிலான ஹவாய் பல்கலைக்கழகத்தின் வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த அபோபிஸ் சிறுகோள் முதலில் ஜூன் 2004 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இது அடுத்து ஏப்ரல் 13, 2029 அன்று சிறுகோள் பூமிக்கு மிக நெருக்கமாக கடந்து செல்லும். எந்த அளவிற்கு நெருக்கம் என்றால் வெறும் கண்ணால் இதை பார்க்க முடியும். பூமியைச் சுற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களின் மண்டலத்திற்குள் செல்லும் வகையில் நெருக்கமாக கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.