Tuesday, March 28, 2023
Homeசெய்திகள்இந்தியாநவம்பரில் தொடங்குகிறது மலபார் கடற்படை பயிற்சி.. சீனாவுக்கு எதிரான இந்தியாவின் ஸ்மார்ட் மூவ்!

நவம்பரில் தொடங்குகிறது மலபார் கடற்படை பயிற்சி.. சீனாவுக்கு எதிரான இந்தியாவின் ஸ்மார்ட் மூவ்!

இந்தாண்டு மலபார் கடற்படை பயிற்சி நவம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல்முறையாக இப்போது ஆஸ்திரேலியாவும் இதில் பங்கேற்க உள்ளதால் இந்த பிராந்தியங்களில் இந்திய நட்பு நாடுகளின் வலிமையை பறைசாற்ற முடியும்.

மலபார் கடற்படை பயிற்சி என்பது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 2015 க்கு பிறகு ஜப்பான் இதில் நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்பட்டது. குவாட் அமைப்பில் உள்ள மூன்று நாடுகளும் இதில் பங்கேற்றாலும் ஆஸ்திரேலியா மட்டும் பங்கேற்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தான் இந்தாண்டுக்கான வருடாந்திர மலபார் கடற்படை பயிற்சியில் கலந்துகொள்ள இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு அழைப்பு அனுப்பியது. இந்தியாவின் இந்த அழைப்பை ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் வரவேற்றன.

தென்சீன கடல் பிராந்தியத்தில் சீனாவின் அத்துமீறல் இருந்து வரும் சூழலில் இந்த 4 நாடுகளின் கூட்டு பயிற்சி என்பது இந்த பிராந்தியங்களில் ஆதிக்கத்தை நிறுவ முயற்சிக்கும் சீனாவுக்கு எதிரான பதில் நடவடிக்கையாகவே அமையும். ஏனெனில் தென்சீன கடல் பகுதியில் 90 சதவிகிதமும் தனக்கு சொந்தம் என உரிமை கோரி வரும் சீனா ஜப்பானுடன் கிழக்கு சீன கடல் பகுதியிலும், இந்தியாவுடன் லடாக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியிலும் அத்துமீற முயன்று வருகிறது. இப்படியான ஒரு சூழலில் தான் வருடாந்திர மலபார் கடற்படை பயிற்சி குறித்த அறிவிப்பை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது.

அதன்படி முதல் கட்டமாக நவம்பர் 3 முதல் 6 ஆம் தேதி வரை விசாகப்பட்டினம் அருகே வங்காள விரிகுடா கடலில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட பயிற்சி நவம்பர் 17 முதல் 20 ஆம் தேதி வரை அரபிக் கடல் பகுதியில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோயை கருத்தில் கொண்டு தொடர்பு இல்லாத கடலில் மட்டும் நடத்தப்படும் பயிற்சியாக இது இருக்கும். நட்பு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை இதன் மூலம் ஏற்படுத்த முடியும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 4 நாட்கள் நடைபெறும் இந்த கடற்படை பயிற்சியில் இந்திய கடற்படை போர் கப்பல்களான ஐஎன்எஸ் ரன்விஜய், ஷிவாலிக், ரோந்து கப்பல்களான சக்தி, சுகன்யா, நீர்மூழ்கி கப்பல் சிந்துராஜ், ஹாக் ஜெட், P-8I மற்றும் டோர்னியர் விமானம், ஹெலிகாப்டர்களும் இந்த பயிற்சியில் கலந்துகொள்ளும். முதல்கட்ட பயிற்சியின் போது மேற்பரப்பு, நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் வான்வழி எதிர்ப்பு நடவடிக்கைகள், ஆயுத துப்பாக்கி சூடு பயிற்சிகள் உள்ளிட்ட சிக்கலான மற்றும் மேம்பட்ட கடற்படை பயிற்சிகளில் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்சீன கடல் பகுதியில் இருக்கும் பெரும்பாலான தீவுகளில் ராணுவ தளத்தை அமைத்து சிறிய நாடுகளை அச்சுறுத்தி வந்த சீனா. அடுத்து இந்தியப்பெருங்கடல் பக்கம் தன் கவனத்தை திருப்பியிருந்தது. ஆனால் அதற்குள்ளாகவே உஷாரான இந்தியா அந்தமான் பகுதிகளில் தன்னுடைய போர்கப்பல்களை நிறுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. இப்போது நடைபெற இருக்கும் மலபார் கடற்படை பயிற்சி ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான நிகழ்வாக இருந்தாலும் சீனாவுடன் மோதல் இருக்கும் இந்த சூழலில் ஆஸ்திரேலியாவையும் இதில் இணைத்துள்ளது கூடுதல் பலத்துடன் எதிர்ப்பை பதிவு செய்யும் இந்தியாவின் ஸ்மார்ட் மூவ் ஆகவே பார்க்கப்படுகிறது.