Saturday, March 25, 2023
Homeசெய்திகள்உலகம்வீட்டீலேயே கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம்.. முதல் செல்ப் டெஸ்ட் "கிட்"க்கு அமெரிக்கா அனுமதி

வீட்டீலேயே கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம்.. முதல் செல்ப் டெஸ்ட் “கிட்”க்கு அமெரிக்கா அனுமதி

வாஷிங்டன் : கொரோனா வைரஸ் தொற்று குறித்து வெறும் 30 நிமிடத்தில் நாமே தெரிந்துகொள்ளும் வகையில் செல்ப் டெஸ்ட் கிட்க்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. ஏற்கனவே ஒரு கோடிக்கும் மேல் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது இரண்டாம் அலை ஏற்பட தொடங்கியுள்ளது, இதனால் பரிசோதனையை மேலும் அதிகரிக்க அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. தற்போது எல்லா நாடுகளிலும் பெரும்பாலும் கொரோனா வைரஸ் பரிசோதனை இரண்டு வழிகளில் செய்யப்படுகிறது. ஒன்று பிசிஆர் சோதனை மற்றொன்று ரேபிட் கிட் பரிசோதனை.

இதில் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வருவதில் குறைந்தது 2 நாட்கள் ஆகும், ஆனால் முடிவுகள் துல்லியமாக இருக்கும். ரேபிட் கிட் சோதனையில் 30 நிமிடங்களில் முடிவுகள் தெரிந்துவிடும் ஆனால் முடிவுகள் அவ்வளவு துல்லியமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அதாவது ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உடலில் வைரஸை எதிர்க்கும் ஆன்டிபாடி உருவாகி இருந்தால் மட்டுமே இதில் பாசிட்டிவ் என்று வரும். வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உடலில் ஆன்டிபாடி உற்பத்தியாக தாமதம் ஏற்பட்டால் கூட நெகட்டிவ் என்று தான் ரேபிட் சோதனையில் காட்டும். இதனால் இதன் பரிசோதனை முடிவுகள் துல்லியமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் நாமே வீடுகளில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் செல்ப் டெஸ்ட் கிட்களுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. லூசிரா ஹெல்த் நிறுவனம் தயாரித்த இந்த கருவிகளை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பதாக அச்சம் அடைந்திருக்கும் 14 வயது அதற்கு மேற்பட்டோர்க்கு நம்முடைய வீடுகளில் வைத்தே ஸ்வாப் சோதனை மூலம் மாதிரி எடுத்து நாமே பரிசோதனை செய்துகொள்ள கூடிய இந்த கருவிக்கு வீட்டு உபயோகத்திற்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனை கருவிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், முழுக்க முழுக்க நாமே நிர்வகித்து வீட்டிலேயே முடிவை தெரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் முதல் கருவி இது தான் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் ஸ்டீபன் ஹான் கூறியுள்ளார். இந்த கருவிகளை மருத்துவமனைகளிலும் பயன்படுத்தலாம், அதேசமயம் 14 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இதன்மூலம் பரிசோதனை செய்தால் கண்டிப்பாக ஒரு சுகாதார அலுவலர் தான் பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

ஆக்ஸ்போர்ட் மற்றும் மாடர்னா உள்ளிட்ட நிறுவனங்களின் தடுப்பூசி முடிவுகள் ஓரளவிற்கு நம்பிக்கை கொடுக்கும் படியாக இருந்தாலும் பரவலான சோதனை முடிவுகள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.