Saturday, March 25, 2023
Homeசெய்திகள்உலகம்“ஆண் மருத்துவர்களிடம் இனி போகவே கூடாது..” பெண்களுக்கு புது உத்தரவை பிறப்பித்த தலிபான்கள்..! ஆப்கானில் தொடரும்...

“ஆண் மருத்துவர்களிடம் இனி போகவே கூடாது..” பெண்களுக்கு புது உத்தரவை பிறப்பித்த தலிபான்கள்..! ஆப்கானில் தொடரும் சோகம்..!

ஆப்கானிஸ்தான் நாட்டில் மீண்டும் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் அந்த நாட்டில் அரங்கேறும் சம்பவங்கள் உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான கல்வி, சம உரிமையை அந்த நாட்டு அரசாங்கம் தொடர்ந்து பறித்துக் கொண்டே வருவது மக்களை மிகுந்த வேதனைக்கு ஆளாக்கி வருகிறது.

இந்த நிலையில், ஆப்கான் நாட்டில் பெண்கள் அனைவரும் இனிமேல் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறக்கூடாது என்ற புதிய உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது அந்த நாட்டு மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்டமாக அந்நாட்டின் பால்க் மாகாணத்தில் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த மாகாணத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் பெண்கள் ஆண் மருத்துவர்களை பார்த்து சிகிச்சை பெற அனுமதி இல்லை. பெண் மருத்துவர்களிடம் மட்டுமே பெண்கள் சிகிச்சை பெற வேண்டும். இதை அனைத்து மருத்துவமனைகளும் உறுதி செய்ய வேண்டும் என தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் ஆட்சிக்கு வந்தது முதல் தலிபான்கள் பெண்கள் கல்வி கற்க தடை, பெண்கள் கார் உள்ளிட்ட வாகனங்கள் ஓட்ட தடை, பூங்கா மற்றும் கேளிக்கை பகுதிகளுக்கு செல்ல தடை, ஹிஜாப் இல்லாமல் பொதுவெளியில் வர தடை என பல்வேறு தடைகள் மீண்டும் பெண்கள் மீது திணித்து வருகின்றனர்.

தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியபோது பெண்களுக்கு உரிமைகள் வழங்குவோம் என்ற உத்திரவாதத்தை அளித்தனர். ஆனால், கல்லூரிகளில் படிக்கத் தடை என நாளுக்கு நாள் அவர்களின் அடிப்படை உரிமைகள் உள்பட பலவற்றை பறித்து வருகின்றனர். ஐ.நா. அமைப்பும், உலக நாடுகளும் ஆப்கானிஸ்தானின் செயலுக்கு தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்