Tuesday, March 28, 2023
Homeசெய்திகள்உலகம்அமெரிக்க எல்லையில் பிரிக்கப்பட்ட 545 குழந்தைகளின் பெற்றோர்களை காணவில்லை.. வெளியான பகீர் தகவல்

அமெரிக்க எல்லையில் பிரிக்கப்பட்ட 545 குழந்தைகளின் பெற்றோர்களை காணவில்லை.. வெளியான பகீர் தகவல்

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் ஆவணங்கள் இல்லாத அகதிகள் குடும்பத்திடம் இருந்து பிரிக்கப்பட்ட 545 குழந்தைகளின் பெற்றோர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என அமெரிக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழிகாட்டுதல் குழு கூறியுள்ளனர். இந்த குழந்தைகள் எல்லாம் 2017 ஜூலை 1 முதல் 2018 ஜூன் 26 வரையிலான காலகட்டத்தில் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் பிரிக்கப்பட்டனர்.

எல்லையில் பாதுகாப்பு அதிகாரிகளால் குழந்தைகள் பிரிக்கப்பட்டதால், பல பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை தொடர்புகொள்ள முடியவில்லை என அமெரிக்க சிவில் உரிமைகள் சங்கம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தான் குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர்களிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியிருந்தது.

[sharethis-follow-buttons]

நீதிமன்ற உத்தரவின் பேரில் குடும்பங்கள் ஒன்றிணைய தொடங்கிய நிலையில் சுமார் 1550 குழந்தைகள் வரை பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஆனால் குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் பிரிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களை கண்டுபிடிப்பது சிரமம் ஏற்பட்டது. ஏனெனில் அப்போது அரசாங்கத்திடம் போதிய கண்காணிப்பு அமைப்புகள் இல்லை, இதனால் குவாதமாலா உள்ளிட்ட சில பகுதிகளில் தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று குழந்தைகளின் பெற்றோரை தேடி வந்தனர்.

இந்த வழக்கை தொடுத்த அமெரிக்க சிவில் உரிமைகள் சங்கம் கூறும் பொழுது நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வழிகாட்டுதல் குழு 485 குழந்தைகளின் பெற்றோர்களை கண்டறித்ததாகவும், 1030 குழந்தைகளில் 545 குழந்தைகளின் பெற்றோர் குறித்த தகவல் கிடைக்கப்பெறவில்லை, மற்றவர்களுக்கு அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து பெற்றோர்களின் தொலைபேசி எண்களை அந்த வழிகாட்டுதல் குழு பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்த 545 குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகளின் பெற்றோர் அவர்களுடைய சொந்த நகரங்களுக்கே திரும்பி சென்று இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் நேரடியாக களத்திற்கே சென்று இந்த குழந்தைகளின் பெற்றோரை தேடி வந்தனர், ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விரைவிலேயே மீண்டும் தொடரும் என்றும் அமெரிக்க சிவில் உரிமைகள் சங்கம் கூறியுள்ளது. இதற்கிடையே நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வழிகாட்டுதல் குழு ஸ்பானிஷ் மொழியிலும் இதுதொடர்பான தகவல்களை பெற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.