Tuesday, March 28, 2023
Homeசெய்திகள்இந்தியா2050ல் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.. இந்தியாவின் 30 நகரங்களுக்கு எச்சரிக்கை.. ஆய்வில் தகவல்

2050ல் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.. இந்தியாவின் 30 நகரங்களுக்கு எச்சரிக்கை.. ஆய்வில் தகவல்

இந்தியாவின் 30 நகரங்கள் அடுத்த 30 ஆண்டுகளில் மிகப்பெரிய தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்க வாய்ப்பிருப்பதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாக இந்தியாவில் இருக்கும் முக்கியமான சில நகரங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வந்தன. குறிப்பாக மஹாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இதில் அடங்கும். சென்னையில் 2 வருடத்திற்கு முன்பு ஏற்பட்ட தண்ணீர் பிரச்சனை உலகம் முழுவதிலும் கவனம் ஈர்த்தது. ஏரிகளை முறையாக பராமரிக்காதது மழைநீரை சேமிக்காதது உள்ளிட்ட காரணங்களால் ஒட்டுமொத்த சென்னை மாநகரமும் அன்றாட தேவைகளுக்கு கூட தண்ணீர் இன்றி தவித்தது. பெரும்பாலான உணவகங்கள் தண்ணீர் இல்லாமல் மூட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில் தான் சர்வதேச இயற்கை நிதியம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் இருக்கும் 30 நகரங்கள் 2050 க்குள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்க வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் முன்பு வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் காலநிலை மாற்றத்துக்கு எதிராக அவசர நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டுமே தண்ணீர் பற்றாக்குறை பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்று வலியுறுத்தியுள்ளது.

30 cities located in India might face acute water risks by 2050

30 இந்திய நகரங்கள்

இந்த ஆய்வில் மொத்தம் உலகின் 100 பெருநகரங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் 30 இந்திய நகரங்களும் அடங்கும். அந்தவகையில் இந்தியாவில் இருக்கும் டெல்லி, ஜெய்ப்பூர், இந்தூர், அமிர்தசரஸ், புனே, ஸ்ரீநகர், கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, கோழிக்கோடு விசாகப்பட்டினம் உள்ளிட்ட 30 நகரங்களுக்கு இந்த ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also Read: Brain Eating Amoeba- மூளையை உண்ணும் நுண்ணுயிர்.. டெக்சாஸ் மாகாணத்தில் கண்டுபிடிப்பு!

நகர்ப்புற திட்டமிடல் மற்றும் ஈரமான நிலங்களை பாதுகாத்தல் ஆகியவை இந்தியாவில் நன்னீர் அமைப்புகள் அப்படியே இருப்பதை உறுதி செய்ய எடுக்கக்கூடிய சில நடவடிக்கைகள் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தண்ணீரைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய அதே நேரத்தில், நீர் பயன்பாட்டைக் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டியது மற்றொரு அம்சமாகும்.

சர்வதேச இயற்கை நிதியத்தின் இந்தியாவின் திட்ட இயக்குனர் செஜல் வோரா கூறுகையில், இந்தியாவின் சுற்றுச்சூழலின் எதிர்காலம் அதன் நகரங்களில் உள்ளது. இந்தியா வேகமாக நகரமயமாக்கப்படுவதால், இந்தியாவின் வளர்ச்சிக்கும், நிலைத்தன்மைக்கும் நகரங்களின் பங்கு முன்னணியில் இருக்கும். நகர்ப்புற நீர்நிலைகள் மற்றும் ஈரநிலங்களை மீட்டெடுப்பது போன்ற இயற்கையை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகள் தீர்வுகளை வழங்கக்கூடும் என்றார்.