Saturday, March 25, 2023
Homeசெய்திகள்உலகம்ஒரு அதிசயத்தை நாங்கள் கண்டிருக்கிறோம்.. துருக்கியில் 91 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட குழந்தை!

ஒரு அதிசயத்தை நாங்கள் கண்டிருக்கிறோம்.. துருக்கியில் 91 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட குழந்தை!

இஸ்மிர் : துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 91 மணி நேரத்திற்கு பிறகு 3 வயது குழந்தை ஒன்று உயிரோடு மீட்கப்பட்ட நிகழ்வு அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

துருக்கியில் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் சமோஸ் நகரில் இருந்து 14 கி.மீ தொலைவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் சமோஸ் தீவில் சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டது. கடற்கரை நகரம் இஸ்மிர் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. அங்கிருக்கும் 7 மாடி கட்டிடங்கள் எல்லாம் மொத்தமாக சரிந்து விழுந்தது. பெரும்பாலான கட்டிடங்கள் ஒன்று சேதமடைந்துள்ளன அல்லது மொத்தமாக இடிந்து விழுந்துள்ளன.

இந்த கட்டிட இடிபாடுகளில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளனர். இதுவரை இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 105ஐ எட்டியுள்ளது. 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் இன்று மீட்பு பணியின் போது அங்கிருந்த மக்கள் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்களுக்கு நெகிழ்ச்சி தரும் நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.

கட்டிட இடிபாடுகளில் இருந்து 3 வயது குழந்தை ஒன்று 91 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. குழந்தை உயிருடன் இருப்பதை பார்த்ததும் அனைவரும் மகிழ்ச்சியில் கோஷம் எழுப்ப தொடங்கினர். அந்த குழந்தையின் பெயர் அய்டா கேஸ்கின். தொடக்கத்தில் நான்கு வயது குழந்தை என்றே கூறப்பட்டது அதன் பின்புதான் குழந்தையின் பெற்றோர் கண்டுபிடிக்கப்பட்டு உண்மையான அடையாளம் தெரிந்தது.

91 மணி நேரத்திற்கு பிறகு ஒரு அதிசயத்தை நாங்கள் கண்டிருக்கிறோம், என்று இஸ்மிர் நகர மேயர் டிவிட்டரில் கூறியுள்ளார். அதிசயத்தின் பெயர் அய்டா என்று துருக்கி அதிபர் எர்டோகன் டிவிட்டரில் கூறியுள்ளார். நான்கு நாட்களாக இரவு பகல் பார்க்காமல் மீட்பு பணியில் ஈடுபட்டு சோர்வில் இருந்த வீரர்களுக்கு இந்த குழந்தை ஒரு புது நம்பிக்கையை கொடுத்துள்ளதாகவும் மீது பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியுள்ளனர்.