Tuesday, March 28, 2023
Homeசெய்திகள்உலகம்நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சீனா ஆஸ்திரேலியா இடையே கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மோதல் நீடித்து வருகிறது. இதற்கிடையே கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியா பொருளாதாரம் மிக கடுமையாக பாதித்தது. இதனால் கொரோனா வைரஸ்க்கு காரணம் சீனா தான் என நேரடியாகவே குற்றம்சாட்டியது. மறுபக்கம் சீனாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக சீனாவுக்கு எதிரான நாடுகளுடன் இணைந்து கூட்டு கடற்பயிற்சியிலும் ஆஸ்திரேலியா ஈடுபட்டது. சமீபத்தில் ஆஸ்திரேலியா மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய சைபர் தாக்குதலின் பின்னணியில் சீனாவில் இருந்து செயல்படும் ஹேக்கர்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டியது.

இப்படி நாளுக்கு நாள் சீனா – ஆஸ்திரேலியா உறவு மோசமாகிக்கொண்டே இருந்த நேரத்தில் சீன நிறுவனமான ஹுவாவே நிறுவனத்துக்கு 5ஜி தொழில்நுட்பத்திற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் அனுமதி மறுத்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சீனாவும் ஆஸ்திரேலிய இறக்குமதி சிலவற்றுக்கு தடை விதித்தது. சீன நிறுவனங்கள் மீது ஆஸ்திரேலியா பாகுபாடு காட்டுவதாகவும் கூறியிருந்தது. இதன் பின்னர் ஆஸ்திரேலிய பிரதமரை கிண்டல் செய்யும் விதமாக கேலி சித்திரத்தை சீன ஊடகம் வெளியிட்டதற்கு ஆஸ்திரேலியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அதை சீனா கண்டுகொண்டதாக தெரியவில்லை.

ஆஸ்திரேலியா சுமார் 40 சதவீத ஏற்றுமதியை சீனாவுக்கு அனுப்புகிறது, 2019-2020 ஆம் ஆண்டில் மட்டும் 240 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் மதிப்பில் இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுத் சீனா மார்னிங் போஸ்ட் இதழுக்காக எழுதிய ஜான் பவர், இந்த மோசமான நிலைகளுக்கிடையில் துரதிர்ஷ்டவசமாக 2021 ஆம் ஆண்டு இருநாடுகளுக்கும் இடையே பதட்டம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். சீனாவின் ஓநாய் வீரர்களின் ராஜதந்திர நடவடிக்கைகளும், 20 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் மதிப்புள்ள அந்நாட்டு இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடை ஆஸ்திரேலியாவை மேலும் தூண்டிவிட்டது போல் ஆகிவிட்டது. சீனாவின் பொருளாதார வற்புறுத்துதலுக்கு பதில் நடவடிக்கையாக ஆஸ்திரேலியா சர்வதேச ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுக்கும் அதே நேரத்தில் இருநாடுகளும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு முக்கிய மதிப்பை கொடுக்கும் எந்த ஒரு சமரச முயற்சியையும் நிராகரிக்கவும் முடியும் என்றார்.

ஆஸ்திரேலியாவின் பார்வையில், அதிகரிக்கும் பதட்டத்தை பார்க்கும் பொழுது சீனாவுடனான உறவை ஏற்றுக்கொள்வது மிகக்குறுகிய காலத்தில் மேம்படாது. அவற்றை சரிசெய்ய வேண்டும் என்றால் நாம் குறிப்பிடத்தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆசியா மற்றும் பசுபிக் பகுதிகளுக்கான ஆஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் கவுரவ பேராசிரியர் டொமினிக் மீஹர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், பெய்ஜிங்கில் உள்ள பாங்கோல் இன்ஸ்டிடியூஷனின் மூத்த உறுப்பினரான மற்றொரு அறிஞர் கிண்டுவோ சூ இதுபற்றி கூறுகையில், கொரோனா தொற்று தொடர்பான சர்வதேச விசாரணையை கோரும் ஆஸ்திரேலியாவின் கோரிக்கை என்பது உண்மைகளை தெரிந்துகொள்வதை விட சீனாவை குறிவைப்பதாகும் என தெரிவித்தார். தனக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் கொள்கைகளுக்கு சீனா ஆக்ரோஷமாக பதிலளிக்கும். ஆஸ்திரேலியா-சீனா உறவுகள் குறித்து ‘\நம்பிக்கையுடன் இருப்பது கடினம் என்றும், ஆஸ்திரேலியா உறவுகளை சரிசெய்ய முன்முயற்சி எடுக்காவிட்டால் எதிர்வரும் ஆண்டில் அந்நாட்டின் ஏற்றுமதிகள் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் சூ கூறினார்.

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கொள்கை வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளவும், அவற்றை சரி செய்யும் முயற்சியில் சீனாவின் பக்கம் சிறிதளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், ராஜதந்திர மற்றும் கொள்கை நடவடிக்கைகளில் ஆஸ்திரேலியா எந்த விருப்பமும் காட்டாமல் இருப்பது இருநாட்டு உறவிலும் முன்னேற்றம் ஏற்படும் என்கிற நம்பிக்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சிட்னியின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆஸ்திரேலியா-சீனா உறவுகள் நிறுவனத்தின் இயக்குனர் ஜேம்ஸ் லாரன்சென்சன் கூறினார்.

சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று 2028 ஆம் ஆண்டிற்குள் சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி பொருளாதாரத்தில் முதலிடம் பிடிக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான ஒரு சூழ்நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து சீனாவுடன் மோதல் போக்கை கடைபிடிப்பது அந்நாட்டின் ஏற்றுமதியை பெருமளவில் பாதிக்க வாய்ப்புள்ளது.