டெல்லி : கொரோனா தொற்று நிலவரம் மற்றும் தடுப்பூசி வினியோகம் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ள நிலையில், முதலில் தடுப்பு மருந்து செலுத்தப்பட இருக்கும் ஒரு கோடி முன்கள பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசு வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பதிப்பின் இரண்டாம் அலை பல மாநிலங்களில் தொடங்கியுள்ள நிலையில், அது குறித்து ஆலோசனை மேற்கொள்ளவும் மேலும் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டால் அதன் விநியோகம் குறித்து முடிவெடுக்கவும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது யாருக்கு முதலில் தடுப்பு மருந்து செலுத்தப்படுவது என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த நிலையில் தான் தடுப்பூசி நிர்வாகம் குறித்த நிபுணர்கள் குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் உயர் வட்டாரங்களில் இருந்து வெளியாகியுள்ள தகவலின் படி, தடுப்பூசி பெறுவதில் முன்னுரிமை பெரும் குழு பற்றிய தரவுகளை சேகரிப்பதில் அடுத்த நிலைக்கு சென்றுவிட்டதாக கூறியுள்ளனர்.
சுகாதார பணியாளர்கள்
இந்திய அரசால் தடுப்பூசிக்கான ஒப்புதல் வழங்கியவுடன், முன்கள சுகாதார பணியாளர்கள் முதலில் பெறுவார்கள். எங்களுக்கு எல்லா மாநிலங்களிலிருந்தும் கணிசமான பதில் கிடைத்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளும் 92 சதவீதம் தரவுகளை வழங்கியுள்ளன. தனியார் மருத்துவமனைகள் சுமார் 56 சதவீதம் தரவுகளை வழங்கியுள்ளன. இவற்றை சேகரிப்பதில் நாங்கள் ஒரு மேம்பட்ட கட்டத்தில் இருக்கிறோம் என்று அரசாங்கத்தின் உயர் வட்டாரம் தெரிவித்துள்ளது. இதில் வெளியான தகவல் என்னவென்றால் சுமார் 1 கோடி சுகாதாரப் பணியாளர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2021 ஜூலை மாதத்திற்குள் 400 முதல் 500 மில்லியன் டோஸ்களை பெறவும் அதன் மூலம் 20-25 கோடி மக்களுக்கு வழங்க முடியும் என்றும் மத்திய அரசு எதிர்பார்க்கிறது. இப்போது அதற்கான பின்னணி வேலைகளும் நடைபெற தொடங்கியுள்ளன. இந்தியாவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் தடுப்பூசிகளை பெறுவதில் தொழில்ரீதியான ஆபத்துக்களை எதிர்கொள்ளும் பணியாளர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதற்காக அந்தந்த மாநிலங்கள் அலோபதி மருத்துவர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள், மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள், அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சுகாதார பணியாளர்களின் விவரங்களையும் வழங்கியுள்ளது. இந்த பிரதான குழுக்களை தவிர்த்து வேறு யாருக்கும் இப்போது முன்னுரிமை கிடையாது. சுகாதார பணியாளர்களுக்கு நோய்த்தடுப்பு மருந்தை செலுத்த தொடங்கியவுடன் இந்த ஒரு கோடி பேருக்கும் தான் முதலில் செலுத்தப்படும் என்றும் அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது மொத்தம் ஐந்து தடுப்பூசி நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. சீரம் நிறுவனத்தால் பரிசோதிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மனித பரிசோதனையின் 3 ஆம் கட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது, பாரத் பயோடெக் 3 ஆம் கட்ட சோதனைகளைத் தொடங்கியுள்ளது, மேலும் சைடஸ் காடிலா 2 ஆம் கட்ட சோதனைகளை முடித்துள்ளனர். ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி, டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துடன் இணைந்து 2-3 கட்ட சோதனைகளை தொடங்கியுள்ளது. மற்றும் பயோலாஜிக்கல் நிறுவனம் ஆரம்ப கட்ட நிலையில் 1-2ம் கட்ட சோதனையை நடத்துகிறது.