ஒவ்வொரு புதிய சீசன் துவங்கும் போதும் சீசனுக்குரிய நோய்கள் பிரபலமாக இருக்கின்றன. இதுபோன்ற நோய்கள் ஏற்பட திடீர் காலநிலை மாற்றம் தான் முக்கிய காரணம் ஆகும். இதுபோன்று காலநிலை மாற்றம் நம் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கும். இதனால் உடல்நல கோளாறு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
நம் நாட்டில் நவம்பர் மாதத்தில் குளிர்காலம் துவங்கிவிடும். இந்த காலத்தில் நம் உடலை நோய் தாக்காமல் ஆரோக்கியமாக பார்த்து கொள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு மண்டம் பாதிக்கப்பட பல்வேறு காரணங்களை கூற முடியும். அவை பின்வருமாறு..
குறைவான சூரிய வெளிச்சம்- குளிர்காலத்தில் சூரிய வெளிச்சம் குறைவாக இருக்கும். இதனால் உடலுக்கு தேவையான அளவு வைட்டமின் டி கிடைக்காமல் போகிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும்.
குளிர் காற்று- தொடர்ந்து குளிர்காற்றை சுவாசிக்கும் போது இரத்த நாளங்கள் குறுகும். இதனால் சுவாச கோளாறு ஏற்படும்.
வெப்பநிலை குறைவு- வெப்பநிலை குறைவாக இருக்கும் போது நோய் எதிர்ப்பு மண்டலம் வழக்கத்தை விட மந்தமாக இயங்கும்.
குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கிக் கொள்ள பல்வேறு வழிமுறைகள் உள்ளன. ஆரோக்கிய உணவு பழக்கவழக்கம் மற்ரும் உடற்பயிற்சி உள்ளிட்டவை நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கை முறையில் அதிகரிக்கும்.
குளிர்காலத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
ஆரஞ்சு
குளிர்காலத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தானாக அதிகரிக்கும். இதில் உள்ள சிட்ரஸ் தன்மையில் ஏராளமான வைட்டமின் சி நிறைந்து இருக்கிறது. இத்துடன் வைட்டமின் டி அதிகமாக இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்படும்.
ஆப்பிள்
ஆப்பிள் பழத்தில் அதிகளவு பைபர், வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் ஆண்டி – ஆக்சிடண்ட்கள் நிறைந்துள்ளன. இதை குளிர்காலத்தில் சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு மண்டலம் சீராக இருப்பதோடு செரிமானம் மற்றும் சரும பலன்களை வழங்குகிறது.
மாதுளை
புற்று நோயை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதில் மாதுளை பெரும் பங்கு வகிக்கிறது. இதிலுள்ள ஏராளமான ஆண்டி-ஆக்சிடண்ட்கள் சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மாதுளையை பழமாகவோ அல்லது பழச்சாறு போன்றும் குடிக்கலாம்.
சாத்துக்குடி
சிட்ரஸ் குடும்பத்தை சேர்ந்த சாத்துக்குடி யில் ஏராளமான வைட்டமின் சி மற்றும் பைபர் நிறைந்துள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
கிவி
கிவி பழம் சற்றே புளிப்பு மற்றும் இனிப்பு சுவை நிறைந்துள்ளது. இதில் அதிகளவு வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இத்துடன் கிவி பழத்தில் வைட்டமின் இ, கே மற்றும் ஆண்டி – ஆக்சிடண்ட்கள், பைபர் மற்றும் போலேட் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, செரிமான மண்டலத்தை சீராக்க உதவுகிறது.