இன்றைய காலத்தில் காதல் நீடித்து திருமணத்தில் முடிவதை காட்டிலும், சில நாட்களிலே காதலே முறிந்து காதலர்களே பிரிந்து விடுகின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதுக்கு முக்கிய காரணம், காதலர்களுக்குள் சரியான புரிதல் இல்லாமல் அமைந்து விடுவது மட்டுமின்றி, காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் இன்னொருவரிடம் விட்டுக்கொடுப்பதும், ஒருவருக்கு ஒருவர் மரியாதை கொடுக்காததும் ஆகும்.
காதலர்கள் தங்களுக்குள் மரியாதையாக பேசிக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால், அடுத்தவர் முன்பாகவும், தனிப்பட்ட சில காரியங்களிலும் மரியாதையாக நடத்த வேண்டியது அவசியம்.
மரியாதை முக்கியமா?
நாம் ஒன்றாக இருக்கும் போது தனிப்பட்ட எல்லைகளை நிர்ணயிப்பது என்பது கடினம். ஆனால், குடும்பங்கள் என்று வரும் போது அவரவர்களுக்கு சில தனிப்பட்ட எல்லைகள் என்பது இருக்கின்றது. அதிலும் கணவன் மனைவி உறவு என்றாலோ அல்லது ஒரு கூட்டுக் குடும்பம் என்று இருந்தாலோ ஒருத்தருக்கான தனிப்பட்ட இடம் என்பது காணாமல் போய் விடுகிறது. இதனால் உறவுக்குள் விரிசல், மன அழுத்தம், சண்டை சச்சரவுகள் என்று ஏராளமான குடும்ப பிரச்சினைகளும் தலைதூக்க ஆரம்பித்து விடுகின்றன.
தனிப்பட்ட இடங்கள், நீங்கள் வேலை செய்யும் இடங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் போன்றவற்றில் காதலர்கள் தங்களுக்குள் கொடுத்துக் கொள்ளும் மரியாதை என்பது மாறும். காதல் உறவுக்குள் செல்லும் முன்பு காதலர்கள் தங்களுக்கு எது பிடிக்கும் என்பதை காட்டிலும், எவையெல்லாம் பிடிக்காது என்பதை தெளிவுப்படுத்திக் கொள்வது சிறந்தது.
விட்டுக்கொடுக்கலாமா..?
உண்மையில் உங்கள் காதலர் உங்களை மதிக்கும் நபர் என்றால், ஒரு முறை நீங்கள் ஒரு காரியத்தை விரும்பாவிட்டால் அதை திரும்ப செய்யமாட்டார். அது காதல் உறவாக இருந்தாலும் சரி, திருமணத்திற்கு பிறகான கணவன் மனைவி உறவாக இருந்தாலும் சரி. ஒரு வேளை அவர் செய்த தவறை ஒப்புக் கொள்ளவில்லை என்றால் உங்கள் உறவை மதிப்பீடு செய்து பாருங்கள்.
உணர்வுகள், ஆசைகள் ஆகியவற்றை எவ்வாறு வெளிப்படையாக பேசிக்கொள்வது நல்லதோ, அதேபோல மரியாதை எதிர்பார்ப்பதையும் வெளிப்படையாக பேசிக்கொள்வது நல்லது. பொதுவௌியில் (வீட்டிலோ, நண்பர்கள் மத்தியிலோ) நம் துணையே நம்மை விட்டுக்கொடுத்து பேசுவது கடுமையான மன உளைச்சலை காதலுக்குள் ஏற்படுத்திவிடும். அதுவே உறவில் விரிசல் ஏற்படுத்திவிடும்.
உங்களுக்கு அன்பு முக்கியமாக இருக்கலாம் ஆனால் அதைவிட மரியாதை முக்கியமாக அமைந்துவிடுகிறது. நீங்கள் உங்கள் துணை அல்லது காதலர் மீது வைத்திருக்கும் மரியாதை உங்கள் மீதான அன்பை அதிகரிக்கச் செய்கிறது. காதலுக்கே மரியாதை தேவைப்படுகிறது. மரியாதை இல்லாமல் காதல் ஒருபோதும் நிற்பதில்லை.