மகிழ்ச்சியாக வாழ்வதற்காகவே மனிதர்கள் காதலிக்கிறார்கள். அனைவருக்கும் காதல் அமைவதில்லை. அப்படி, சிலருக்கு அமைகின்ற காதலும் சிறப்பாக இருப்பதில்லை.
அதற்கு காரணம் காதலில் நமது தேர்வு சரியாக அமையாதது என்றே கூறலாம். முதலில் சரியானவர்களாக தெரியும் காதலர்கள் நாட்கள் போக போக தான் தங்களது சுயரூபத்தை காட்டுகிறார்கள். அவர்களின் நடவடிக்கைகள் நம் மனதை மட்டுமின்றி உடல்நலத்தையும் பாதிக்கிறது.
பல காதல் உறவுகளில் தொடக்கத்தில் விட்டுக்கொடுத்து செல்லும் காதலர்கள், ஒரு கட்டத்தில் இனி நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். என்னை தவிர வேறு யாரிடமும் பேச கூடாது என்று அதீத அன்பு என்ற பெயரில் அடிப்படை சுதந்திரத்தை பறிக்கும் வகையில் அமைகிறது. இதனால், காதல் முறிவில் ஏற்படுவதுடன் ஆரோக்கியமும் பாழ்படுகிறது.
இதய நோய்கள்:
நட்பு, குடும்பத்தில் பிரச்சினை வந்தாலே மனிதன் மனக்கவலை அடைகிறான். இந்த நிலையில், காதலில் பிரச்சினை வந்தால் சொல்லவா வேண்டும்..? எப்போதெல்லாம், உங்கள் உறவுகளில் பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் ஆரோக்கியமற்ற முறையில் உங்களின் ரத்த அழுத்தம் உயர்கிறது. ஆய்வு ஒன்றின்படி, இதய அடைப்புகளால் அதிகமாக உயிரிழப்பவர்களில் விவாகரத்து பெற்றவர்கள், தனித்து வாழ்பவர்களே அதிகம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
உடல் எடை:
நிம்மதியற்ற காதல் வாழ்க்கை உடல் எடையில் தாக்கத்தை ஏற்படுத்தும். 8000 பேருக்கும் மேல் 11 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் உறவுமுறையில் தங்களுக்கு நெருக்கமானவர்களோடு பிரச்சனை உள்ளவர்கள் அதிக எடை அதிகரிப்பிற்கு ஆளாவதாக ஆய்வு முடிவு கூறுகிறது. அவர்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயங்களும் கண்டறியப்பட்டுள்ளது.
வாழ்நாளை குறைக்கும்:
2016ல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் மனஅழுத்த பிரச்சனைகளுக்கும், வயதாகும்போது ஏற்படும் தாக்கங்களுக்கும் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, நிம்மதியற்ற காதல் உறவுக்குள்ளும், திருமண பந்தத்துக்குள்ளும் சிக்கி கொண்டு, இளம் வயதிலிருந்தே மன அழுத்த பிரச்சனைகளுக்குள் மாட்டி கொண்டு தவிப்பவர்கள் ஆயுட்காலம் குறைவானதாகவே இருக்குமாம்.
அதிகரிக்கும் மன அழுத்தம்:
தனிமை, விரக்தி, ஏமாற்றம் போன்ற பல விஷயங்கள் தனிநபர்களை பாதிக்கிறது. அதே நபர் ஒரு நல்ல உறவில் இருக்கும்போது இந்த சோகங்களை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதால் அந்த பிரச்சனைகளின் மனஅழுத்தம் ஏற்படுத்தும் தாக்கம் குறைகிறது. ஆனால், அவர் சிக்கலான, நிம்மதியற்ற டாக்சிக் காதலில் தனிநபராக இருந்து சந்திக்க கூடிய அனைத்து பிரச்சனைகளும் இரண்டு மடங்காக வரும்போது நாள்பட்ட டிப்ரஷனுக்குள் அது தள்ளி விடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பொதுவாகவே நமது சோகங்களையோ அல்லது மனநிலை மோசமாகவோ இருக்கும்போதோ அதை பகிர்ந்து கொண்டு ஆறுதல் தேடும் இடமாக காதலை பார்ப்போம். ஆனால், டாக்சிக் காதல்கள் இதற்கு எதிராக அந்த மனஅழுத்தத்தை இன்னும் அதிகமாகவும், நீண்ட காலத்துக்கு நீடிக்க கூடியதாகவும் மாற்றி விடும் என ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக, தைராய்டு , நோயெதிர்ப்பு மண்டலம், மனஅழுத்த நோய்களை அதிகப்படுத்தி விடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே, உங்கள் காதல் துணையை அல்லது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் முன் எதிர்கால சிந்தனையுடன் நன்றாக முடிவு செய்து சரியான நபரைத் தேர்வு செய்யுங்கள்.