பெண்கள் இன்று ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். ஆண்களைப் போலவே 24 மணிநேரமும் வேலைக்கும் செல்கின்றனர். அவ்வாறு வேலைக்கு சென்றுவிட்டு நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்கு திரும்பும் பெண்களுக்கு சில சமயங்களில் ஆபத்துகள் நேரிடும் அபாயமும் ஏற்படுகிறது.
மர்மநபர்கள் மூலமாகவோ, திருடர்கள் மூலமாகவோ தங்களுக்கோ அல்லது தங்கள் உடைமைகளுக்கோ ஆபத்து ஏற்பட்டால் அதில் இருந்து தங்களை எப்படி சமயோஜிதமாக தற்காத்துக் கொள்வது என்பதை கீழே காணலாம்.
நள்ளிரவில் பணிமுடிந்து பல பெண்களும் ஆட்டோவிலும், காரிலும் தற்போது ரேபிடோ எனப்படும் இரு சக்கர வாகனத்திலும் சவாரி மேற்கொள்கின்றனர். இதுபோன்ற பயணங்களில் வரும் ஓட்டுநர்கள் நம்பிக்கையானவர்களாக இருப்பினும், சில சமயங்களில் சில ஓட்டுனர்களின் நடவடிக்கைகள் உங்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தினால் பயப்படத் தேவையில்லை.
- பெண்கள் எப்போதும் தாங்கள் பயணம் செய்யும் வாகனத்தின் எண்களை குறித்துக்கொள்ளுங்கள். பிறகு உங்களுடைய வீட்டிற்கோ அல்லது நண்பர்களுக்கோ தொடர்பு கொண்டு ஓட்டுனருக்கு புரியும் விதத்தில் அவரை பற்றியும், ஆட்டோவை பற்றிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.
- உங்கள் தொலைபேசி அழைப்பை யாரும் எடுக்காவிட்டாலும், உங்கள் நண்பரிடம் கூறுவது போல் நடிக்கவாது செய்யுங்கள். இதன் மூலம் அந்த நபர் ஏதேனும் தவறாக நடக்க முயற்சித்தால் மாட்டிக் கொள்வோம் என்று அச்ச உணர்வுடனே உங்களுக்கு தொந்தரவு தர மாட்டார்.
- வீட்டில் தனியாக இருக்கும்போது உங்களை யாரேனும் தாக்கவோ, உங்களிடம் தவறாகவே நடக்க முயற்சித்தால் சமையலறைக்கு சென்று விடுங்கள்.
- மஞ்சள், மிளகாய் பொடி, கத்தி என சமையலறையில் இருந்த அத்தனை பொருட்களையும் ஆயுதங்களாக மாற்றி சண்டையிடுங்கள்.
- கத்தி, கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரையும் உதவிக்கு அழையுங்கள்.
- இரவில் நீங்கள் தனியாக செல்லும்போது யாராவது உங்களைத் துரத்தினால் அருகில் இருக்கும் வீட்டிற்குள்ளோ, கடையிலோ நுழைந்து உங்கள் நிலைமையை கூறி அவர்களிடம் உதவி கேளுங்கள்.
- அருகில் ஏ.டி.எம். மையம் இருந்தால் அங்கு சென்று விடுங்கள்.அங்கு எப்போதும் காவலாளிகள் இருப்பார்கள். அதுமட்டுமின்றி, அங்கு கேமராவும் இருக்கும். அதனால் யாரும் உங்களை எதுவும் செய்ய இயலாது.
- பெண்கள் எப்போதும் தங்களது கைப்பைகளில் பேனா, கத்தி, பெப்பர் ஸ்பிரே ஆகியவற்றை வைத்துக்கொள்ளுங்கள். ஆபத்து வரும் வேளையில் இதை ஆயுதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
- தமிழ்நாடு காவல்துறை சார்பில் காவலன் என்ற செயலியை ஆபத்து கால செயலியாக அறிமுகப்படுத்தியுள்ளனர்.
- இந்த செயலி மூலம் நீங்கள் ஆபத்து காலத்தில் சமிக்ஞை அளித்தால் காவல்துறையினர் எங்கிருந்தாலும் சில நிமிடங்களில் நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்துவிடுவார்கள்.
ALSO READ | பெண்களே உஷார்.. அந்தரங்கத்தை படம்பிடிக்கும் ரகசிய கேமராவில் இருந்து தப்பிப்பது எப்படி?