உலகம் முழுவதும் உள்ள முருகப் பக்தர்கள் தைப்பூச நன்னாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு வீடுகளில் சைவ உணவுகளை விதவிதமாக செய்து அசத்துவது வழக்கம். விரதம் முடிந்த பிறகு இந்த உ.ணவுகளை சாப்பிட்டு மகிழ்வார்கள்.
இந்த தைப்பூச திருநாளில் வீடுகளில் அருமையான திணை பாயாசம் செய்து மகிழுங்கள். திணைப்பாயாசம் செய்வது எப்படி? என்பதை கீழே விரிவாக காணலாம்.
தேவையான பொருள்கள்
• திணை அரிசி – ½ கப்
• வெல்லம் – ¾ கப்
• சிறு பருப்பு – 4 டீஸ்பூன்
• தேங்காய் பால் – ½ கப்
• ஏலக்காய் – ½ டீஸ்பூன்
• தேங்காய் துருவியது – ½ கப்
• முந்திரி, திராட்சை – 10
• நெய் – 1 டீஸ்பூன்
• உப்பு – தேவையான அளவு
செய்வது எப்படி?
• முதலில், திணை அரிசியை கடாய் ஒன்றில் அதனை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
• பிறகு, குக்கரில் வறுத்த திணை அரிசியுடன் சிறு பருப்பும் சேர்த்து 2 கப் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
• இதனை 3 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
• அதன் பின், பாத்திரம் ஒன்றில் வெல்லத்தைப் போட்டு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.
• குக்கரில் அரிசி வெந்த பிறகு, கரைத்த வெல்லத் தண்ணீரை ஊற்றி கிளற வேண்டும். இதோடு தேங்காய் துருவல் மற்றும் தேங்காய் பால் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
• இதனை இரண்டு நிமிடங்களுக்குக் கொதிக்க விட்டால் போதுமானது.
• பிறகு, தனியே கடாய் ஒன்றில் நெய் ஊற்றி, முந்திரி, திராட்சை சேர்த்து வதக்கி அதனை அப்படியே பாயாசத்தில் கொட்டி கலக்க வேண்டும்.
• இப்போது சுவையான திணை பாயாசம் தயாராகி விடும்.
இந்த திணை பாயாசத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. வீட்டில் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து மகிழுங்கள்.