கோடை காலம் என்று சொன்னாலே உள்ளுக்குள் வியர்க்கத் தொடங்கி விடுகிறது. அதனால், பர்னிச்சர் கடைகளில் ஏ.சி., விற்பனை அமோகமாக நடந்தேறும். அந்த காலத்தில் கோடை காலம் என்றால் மக்கள் அதிகளவில் தேடியது மண்பானையையே.
நமது முன்னோர்கள் சாப்பிட்ட உணவும், அதை சமைப்பதற்காக அவர்கள் பயன்படுத்திய பாத்திரங்களுமே நமக்கு ஆரோக்கியத்தை மட்டுமே கற்றுத்தந்தது. அந்த வகையில் மிகவும் முக்கியமான ஒரு ஆரோக்கியம் நிறைந்த பொருள் மண்பானை.
மண்பானையில் தண்ணீர் குடித்தவர்களுக்கு தெரியும் அதன் குளுமை எந்தளவு இனிமையாக இருக்கும் என்று. அப்பேற்பட்ட மண்பானையில் எத்தனை மகிமைகள் இருக்கிறது தெரியுமா.?
மண்பாண்ட முக்கியத்துவம் :
- மண்பாண்ட பொருட்களை களிமண்ணால் செய்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
- மண்பாண்ட பொருட்களில் உள்ள காரத்தன்மை அதில் தயாரிக்கப்படும் உணவுகளின் pH அளவை சரியாக வைத்திருக்கும்.
- இப்பொருட்களில் உள்ள இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை சமைக்கும் உணவு பொருட்களில் கலந்து நமக்கு கிடைக்கும்.
- மண்பானைகளில் செய்யப்படும் உணவின் சுவை அதிகரிக்கும், குறிப்பாக, மண்பானையில் மீன் குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் சுவைக்கு ஈடே கிடையாது.
- மண்பானையில் சமைத்து சாப்பிடும்போது உடல் சூட்டை குறைக்கும், இரத்த குழாய் சீராகும்.
- மண்பாண்ட பொருட்களை கொண்டு சமைக்கும்போது உணவில் வெப்பம் சம அளவு பரவி சீராக இருக்கும்.
- அதாவது, களிமண் கொண்டு செய்யும் பொருட்களானது உலோகங்கள் போல் அல்லாமல் வெப்பத்தை எதிர்க்கின்றன. இதனால் உணவு மெதுவாக சமைக்கப்படுகிறது.
- மண்பாண்ட பொருட்களில் உணவு மெதுவாக வேகும் என்பதால் மொத்த சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.
- மண்பானைகளில் சமைக்கும்போது சிறிதளவு எண்ணெயை பயன்படுத்தினாலே போதுமானது.
இதையும் கவனிங்க:
முதன்முதலாக மண்பாண்டத்தில் சமைப்பவர்கள் அதை முதலில் நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். பின் தண்ணீரில் ஒருநாள் இரவு முழுவதும் மூழ்கி இருக்கும்படி வைக்கவும். பின் வெயிலில் சில மணி நேரம் காய வைத்து எடுத்து கொள்ளவும். அதற்கு பிறகு எண்ணையை தடவி சிறிது நேரம் அப்படியே வைக்கவும். பின் அரிசி வடிகட்டிய நீர் அல்லது சாதம் வடிகட்டிய கஞ்சியை அந்த மண் சட்டி நிறையும் வரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். அவ்வாறு அடுப்பில் வைக்கும்போது மிதமான தீயிலே வைக்க வேண்டும். அவை நன்கு கொதித்த பின் அடுப்பை அணைத்து விடலாம். மண்பானையில் நுண் துளைகள் இருக்கும். அதை போக்க தான் மேற்கண்ட முறைகளை செய்கின்றோம்.
நமது முன்னோர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு அவர்களது உணவுப்பழக்கங்கள் மிகப்பெரிய காரணம். நாம் இன்று கௌரவம் போன்ற பல்வேறு காரணங்களால் மஞ்சள் பை, மண்பானை, இலையில் சாப்பிடுவது போன்ற பல பழக்கங்களை கைவிட்டு விட்டு ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். நமது ஆரோக்கியத்தை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
ALSO READ | ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்..! பாதுகாப்பாக மீண்டும் பயன்படுத்துவது எப்படி?