உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருந்தால் இதயம் சார்ந்த குறைபாடு ஏற்படும். அதிக கொலஸ்டிரால் காரணமாக உடலில் ஏற்படும் அபாயத்தை அறிந்து கொள்ள மருத்துவர்கள் டோட்டல் கொலஸ்டிரால், லோ டென்சிட்டி லிபோ-புரோடீன்ஸ் மற்றும் ஹை டென்சிட்டி லிபோ-புரோடீன் கொலஸ்ட்ரால் அளவுகளை கண்டறியும் டெஸ்ட் எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.
இவற்றில் டோட்டல் மற்றும் எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவுகள் இதய கோளாறை ஏற்படுத்தும். ஹை கொலஸ்டிரால் பிரச்சினையை தவிர்க்க ஆரோக்கிய உணவு முறை, அன்றாட உடற்பயிற்சி, உடல் எடை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை உள்ளிட்டவைகளை பின்பற்ற வேண்டும். இதுதவிர வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களும் கொலஸ்டிரால் அளவுகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும்.
பூண்டு
இந்திய சமையலில் பூண்டு அதிக பங்கு வகிக்கிறது. இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை நிறைந்தது ஆகும். பூண்டில் அதிக அமினோ ஆசிட், வைட்டமின், மினரல்கள் மற்றும் ஆர்கனோசல்பர் காம்பவுண்ட்கள் அதிகம் நிறைந்துள்ளது. உடலில் உளஅள டோட்டல் மற்றும் எல்டிஎல் கொலஸ்டிரால் அளவுகளை குறைப்பதில் பூண்டு பெரும் பங்கு வகிக்கிறது என பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
கொலஸ்டிரால் மட்டுமின்று பூண்டு உட்கொண்டால் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் அதிக பங்காற்றுகிறது. தினமும் 1/2 முதல் 1 பூண்டு பல் உட்கொண்டால் உடலில் கொலஸ்டிரால் அளவு 9 சதவீதம் வரை குறையும்.
கிரீன் டீ
தண்ணீருக்கு அடுத்தப்படியாக அதிகம் குடிக்கப்படும் நீராகாரமாக கிரீன் டீ இருக்கிறது. இதில் பெருமளவு பாலிபெனால்கள் உள்ளன. இதில் உள்ள காம்பவுண்டுகள் உடலுக்கு தேவையான நன்மையை ஏற்படுத்தும். எல்டிஎல் கொலஸ்டிராலை குறைப்பது மட்டுமின்றி ஹெச்டிஎல் கொலஸ்டிராலை அதிகரிப்பதிலும் கிரீன் டீ பெரும் பங்கு வகிக்கிறது.
மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் கிரீன் டீ குடித்த ஆண்களுடன் ஒப்பிடும் போது கிரீன் டீ குடிக்காதவர்களுக்கு அதிக கொலஸ்டிரால் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அன்றாடம் இரண்டு முதல் மூன்று கோப்பை கிரீன் டீ வரை குடிக்கலாம்.
தனியா
ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் தனியா அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது உடலில் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைப்பதில் தனியா பெரும் பங்கு வகிக்கிறது. இதில் உள்ள போலிக் ஆசிட், வைட்டமின் ஏ, பீட்டா கரோடின் மற்றும் வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளது.
இசப்கோல்
இசப்கோல் (Psyllium Husk) – இயற்கை அங்காடி அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இசப்கோலை உணவில் சேர்த்து கொண்டால் உடலில் கொலஸ்டிரால் அளவு குறைந்து இதய பாதிப்பை குறைக்க முடியும் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு தெரிவித்து இருக்கிறது. இசப்கோலில் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய பைபர் நிறைந்துள்ளது. அன்றாட உணவில் 1 முதல் 2 ஸ்பூன் இசப்கோலை சேர்த்து கொண்டால் உடலின் கொலஸ்டிரால் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
Also Read: இதயத்தை பத்திரமாக பாத்துக்க இதை மட்டும் செய்தால் போதும்!
வெந்தயம்
தமிழக சமையலில் தவிர்க்க முடியாத ஒன்றாக வெந்தயம் இருக்கிறது. இதில் அதிகளவு வைட்டமின் இ, ஆண்டி-டையாபெடிக், ஆண்டி-இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆண்டி-ஆக்சிடண்ட்கள் நிறைந்துள்ளன. இதுதவிர வெந்தயத்தில் உள்ள சபோனின்கள் உடலில் கொலஸ்டிராலை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது. தினமும் 1/2 முதல் 1 ஸ்பூன் அளவு வெந்தயம் உட்கொள்வது உடலில் நல்ல பலனை ஏற்படுத்தும்.
நெல்லிக்காய்
நெல்லிக்காயில் அதிகளவு வைட்டமின் சி, பெனோலிக் காம்பவுண்டுகள், மினரல் மற்றும் அமினோ ஆசிட்கள் நிறைந்துள்ளன. ஆயுர்வேத சிகிச்சை முறையில் நெல்லிக்காய் பலவிதங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உடலின் பல்வேறு இதர பாதிப்புகளை சரி செய்வதுடன் கொலஸ்டிரால் அளவுகளை குறைப்பதிலும் நெல்லிக்காய் அதிக பங்காற்றுகிறது என கண்டறியப்பட்டு உள்ளது.
தினமும் நெல்லிக்காய் உட்கொள்ளும் போது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் வெளியேறுவதோடு ஆக்சிடேஷனால் ஏற்படும் பாதிப்புகளும் குறையும்.