பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்றாடம் அவற்றை கவனித்து கொள்வது அவசியம் ஆகும். பற்கள் ஏற்கனவே ஆரோக்கியமாக இருந்தாலும், அதனை பராமரித்தல் எதிர்கால பிரச்சினைகளில் சிக்காமல் தவிர்க்க உதவும். இதற்கு அன்றாட பழக்கவழக்கம் துவங்கி அதற்கு தேவையான பொருட்களை கவனமாக தேர்வு செய்தல் அவசியம்.
ஆயில் புல்லிங்
வாயில் உள்ள பாக்டீரியா மற்றும் கிருமிகளை சுத்தம் செய்வதற்கு ஆயில் புல்லிங் சிறந்த முறையாகும். காலையில் வெறும் வயிற்றில் 1 டேபிள் ஸ்பூன் அளவுக்கு சுத்தமான நல்லெண்ணையை வாயில் வைத்து அனைத்து இடங்களிலும் படுமாறு ஐந்து நிமிடம் கொப்பளிக்க வேண்டும். பிறகு எண்ணையை துப்பிவிட்டு வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பிளிக்க வேண்டும். அதன் பிறகு எப்பொழுதும் போல் பற்களை டூத்ப்ரஷால் துலக்கி கொள்ளலாம். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால் வாய் மற்றும் பல் இடுக்குகளில் உள்ள பாக்டீரியா நீங்கி பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பல் துலக்காமல் உறங்க வேண்டாம்
பற்களை தினமும் இருமுறை துலக்க வேண்டும். எனினும், பலர் இரவு நேரங்களில் பல் துலக்கும் வழக்கத்தை பின்பற்றுவதே இல்லை. இரவில் உறங்கும் முன் பல் துலக்கினால் நாள் முழுக்க பற்களில் உள்ள கிருமிகளை அழிக்க முடியும்.
முறையாக பல் துலக்க வேண்டும்
எப்படி பல் துலக்குகிறோம் என்பதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். முறையாக பல் துலக்காதது, உண்மையில் பல் துலக்காமல் இருப்பதற்கு சமம் ஆகும். பல் துலக்கியை மென்மையாக பற்கள் முழுக்க வட்ட வடிவத்தில் தேய்க்க வேண்டும்.
நாக்கு
பற்களில் கிருமிகள் சேர்வதை போன்றே நாக்கிலும் அவை சேரும். நாளடைவில் இவை வாயில் துர்நாற்றம் ஏற்படுத்தும். இதனால் ஒவ்வொரு முறை பல் துலக்கும் போதும் நாக்கை சுத்தம் செய்வது அவசியம் ஆகும்.
புளோரைட் டூத்பேஸ்ட்
டூத்பேஸ்டை தேர்வு செய்யும் போது பற்களை வெள்ளையாக்குதல் மற்றும் அதிக பிளேவர் நிறைந்தவற்றை மட்டும் கவனிக்க கூடாது. பற்பசையில் போதுமான அளவு புளோரைட் உள்ளதா என்பதை உற்று கவனிக்க வேண்டும். வாய் சுத்தத்தை கவனிப்பதில் புளோரைட் அதிக பங்கு வகிக்கிறது.
இடுக்குகளை சுத்தம் செய்தல்
பற்களை துலக்கியதும் பல் இடுக்குகளையும் சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு பிளாஸ் மற்றும் மவுத் வாஷ் உள்ளிட்டவைகளை பயன்படுத்த வேண்டும். பிளாஸ் கொண்டு பல் இடுக்குகளில் உள்ள உணவு துகள்களை நீக்க முடியும்.
கடினம் ஆனால் பின்பற்றவும்
பிளாசிங் செய்வது சற்றே கடினமான ஒன்றாக இருக்கலாம். எனினும், பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் பிளாஸ் செய்வதை வழக்கமாக கொள்ளுங்கள்
மவுத்வாஷ்
விளம்பரங்கள் மவுத்வாஷ் மகத்துவத்தை எடுத்து கூறினாலும், பலர் இதன் பயன் அறியாமல் அதனை பயன்படுத்துவதில்லை. மவுத்வாஷ் வாயில் பல் துலக்கிகள் செல்ல முடியாத பகுதிகளை சுத்தம் செய்து, வாயில் உள்ள ஆசிட் அளவை குறைத்து பற்களுக்கு தேவையான மினரல்களை கொடுக்கிறது.
நீர்
உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை நீரில் அதிகம் நிறைந்துள்ளது. ஒவ்வொரு முறை உணவு உட்கொண்டதும் நீர் குடித்தல் அவசியம் ஆகும். இவ்வாறு செய்யும் போது சிலவகை உணவுகளில் இருக்கும் நச்சு தன்மைகளால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
நொறுக்கு தீனி
ரெடிமேட் உணவுகள் நம் வேளையை சுலபமாக்கினாலும், பற்களின் ஆரோக்கியத்துக்கு இது எந்த வகையிலும் நல்லதல்ல. இதனால் சுத்தமான பழம் மற்றும் காய்கறி வகைகளை அப்படியே உட்கொள்வது சிறப்பான பலன்களை கொடுக்கும். இவற்றில் உள்ள நார்ச்சத்து பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
சர்க்கரை
அதிக சர்க்கரை நிறைந்த உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. இவை சொத்தை பற்கள் உருவாகுவதற்கு வழிவகுக்கும். அதிகப்படியான சக்கரை எடுத்துக்கொள்ளும் போது அது வாயில் உள்ள பாக்டீரியாவுடன் இனைந்து அமிலத்தை உற்பத்தி செய்யும். இந்த அமிலம் பல் எனாமலை அரித்துவிடும். ஆகையால் தேனீர், காபி, பழச்சாறு போன்றவைகளில் அதிகப்படியான சக்கரை அளவை தவிர்த்தல் நல்லது.
எலுமிச்சை, அன்னாசி போன்ற ஆசிட் நிறைந்த பழங்களை உட்கொள்வதும் பல் எனாமலை அரித்துவிடும். ஆகையால் இவற்றை கவனமுடன் அளவாக எடுத்துக் கொள்ளலாம்.
இதுவும் அவசியம்
அன்றாட பழக்கவழக்கங்கள் ஒருபுறம் இருந்தாலும், வருடத்திற்கு இரண்டு முறை பல் மருத்துவரை சந்தித்து பற்களின் ஆரோக்கியத்தை பரிசோதனை செய்வது அவசியம் ஆகும். இது பற்களின் ஆரோக்கியம் பற்றி அறிந்து கொள்ள உதவும்.