கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், நாம் உணவு விஷயத்திலும், உடை விஷயத்திலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் ஆரோக்கிய விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், குழந்தைகள் இந்த காலகட்டங்களில் வெயில் சம்பந்தப்பட்ட இன்னல்களுக்கு ஆளாக நேரிடும்.
இதனால், அவர்களுக்கு சத்துகள் நிறைந்த பழங்களை அளிக்க வேண்டும். வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய பழங்கள் என்னென்ன?
- இரத்தத்தில் இருக்கும் சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கும் சக்தி மாதுளம் பழத்திற்கு உண்டு. குழந்தைகளின் இதய ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதற்கும் உதவுகிறது.
- தர்பூசணியை குழந்தைகளுக்கு பழச்சாறாக தராமல், பழமாகவே சாப்பிட கொடுக்கவும். உடலில் நீர் வற்றிப்போகாமல் இருக்க இவை பெரிதும் உதவும்.
- கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு உடல் சூடு காரணமாக, வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு. இதனை தடுக்கும் சக்தி கொண்டது, சப்போட்டா பழம். இதனால், இரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.
- பெரிய நெல்லிக்காயை அப்படியே கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். ஆகையால் சிறிது உப்பு, மஞ்சள் கலந்து வேக வைத்து கொடுக்கலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- வெயில் காலத்தில் பச்சை, கருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை என அனைத்து வகை திராட்சைகளையும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். இது சோர்வடைய விடாமல் பாதுகாக்கும்.
- கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி மற்றும் பி சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரண கோளாறுகளை நீக்கி உடல் வளர்ச்சிக்கும், எலும்புகள் பலம் அடைவதற்கும் உதவுகிறது.
- ஒரு டம்ளர் நீரில் ஒன்று அல்லது இரண்டு துளி எலுமிச்சை சாற்றை கலந்து குழந்தைகளுக்கு குடிக்க தருவதன் மூலம் ஆரோக்கியத்தில் நன்மை ஏற்படும். மதிய வேளையில் இப்படி தர வேண்டும்.
- சாத்துக்குடியில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால், குழந்தைகளின் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். மேலும் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமலும் தடுக்கும்.
- கோடைகாலத்தில் குளிர்ச்சியை தரக்கூடிய பழங்களில் ஒன்று வெள்ளரி. இது உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும்.
- முலாம் பழத்தை துண்டுகளாக்கி சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இது குழந்தைகளுக்கு ஏற்படும் சருமப் பிரச்சனைகளை தடுக்கும்.
மேலே கூறிய பழங்களை குழந்தைகளுக்கு இந்த கோடை காலத்தில் தருவதால் அவர்களது உடலில் ஏராளமான நன்மைகள் ஏற்படும். மேலும், வெயில் கால பிரச்சினைகளில் இருந்து அவர்கள் தப்பிப்பார்கள்.
ALSO READ | கோடையிலும் ஆரோக்கியமா இருக்கனுமா? அப்போ வெள்ளரிக்காய் சாப்பிடுங்க..!