பொதுவாக கடைகளில் பலமுறை பொறித்த எண்ணெய்யை பயன்படுத்தி செய்யப்படும் பலகாரங்களை சாப்பிட்டால் நமது உடலுக்கு தீங்கு ஏற்படும். எனவே அத்தகைய பொருள்களை வாங்கி உண்பதை தவிர்ப்பது அல்லது குறைத்து கொள்வது நமது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால், நமது வீடுகளிலும் பலகாரங்கள் செய்யும் போது இதே தவறை தான் நம்மில் பலர் சிக்கனம் என்ற பெயரில் செய்கிறோம்.
என்னென்ன ஆபத்துகள்?
முதல்முறை பொறிக்கும் போது அந்த எண்ணெயில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் நமக்கு கிடைக்கும். ஆனால் அதனை மறுமுறை உபயோகிக்கும் போது அதில் இருக்கும் சத்துக்கள் குறைந்து நச்சுத்தன்மையே அதிகமாக இருக்கும். அதன் சுவை, மனம் மற்றும் நிறம் கூட மாறிவிடும் அபாயம் உள்ளது.
ஒருமுறை நன்கு சூடாக்கிய எண்ணெய்யை ஆற வைத்து மீண்டும் உபயோகிக்கும் போது அதிலிருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்களின் அளவு குறைவதோடு புற்றுநோய் ஏற்படுத்தும் ஃப்ரீரேடிக்கல்ஸ் உருவாவதற்கான சாத்தியக்கூறு அதிகமாகிறது இதனால் நமக்கு புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகரிக்கும்.
பாக்டீரியா அபாயம்:
நாம் பொறிப்பதற்கு உபயோகப்படுத்திய எண்ணெயில் மீதம் இருக்கும் உணவுத் துகள்களை சரியாக நீக்காமல் அப்படியே வைத்தால், அதில் பாக்டீரியாக்கள் உருவாகி நாளடைவில் தொற்று நோய்களை ஏற்படுத்தக் கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிகமாக சூடாக்கிய எண்ணெயில் இருக்கும் நல்ல கொழுப்புகள் அனைத்தும், கெட்ட கொழுப்புகளாக மாறி அதாவது தீங்கை விளைவிக்கும் டிரான்ஸ் கொழுப்புகளாக மாறிவிடும். இத்தகைய டிரான்ஸ் கொழுப்புகள் இருக்கும் பொறித்த உணவுகளை நாம் உண்ணும் போது நமக்கு மாரடைப்பு மற்றும் இதர இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆல்டிஹைடுகள்:
சோளம், சூரியகாந்தி மற்றும் சோயாபீன் எண்ணெய்களை அதிகப்படியாக சூடுபடுத்தும்போது ஆல்டிஹைடுகள் எனப்படும் ரசாயனங்கள் அதிகளவில் வெளியேறுகின்றன, இவை பல்வேறு வகையான புற்றுநோய்களை ஏற்படுத்தக் கூடியவை. ஆலிவ் எண்ணெய் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு சமைக்கும் போது மிகக் குறைந்த அளவே ஆல்டிஹைடுகள் உருவாகின்றன.
அதனால், பெரும்பாலும் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது ஆகும்.