பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்றே. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மாறி வரும் உணவுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற பல காரணங்களால் மாதவிடாய்போது பெண்கள் பல சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
மாதவிடாய் வலி
இயற்கையாகவே மாதவிடாய் காலத்தின்போது பெண்களுக்கு கடும் வலி ஏற்படுகிறது. சமீபகாலமாக, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின்போது ஏற்படும் வலி அதிகரித்து வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
மாதவிடாய் வரும்போது ஏற்படும் வலிக்கு Dysmenorrhoea என்று பெயர். அந்த காலகட்டத்தில் பெண்கள் கடும் சிரமங்களை சந்திப்பதுடன் தினசரி வாழ்க்கை முறையானது பாதிக்கப்படுகிறது. இதனால், மாதவிடாய் வலி தீர பல இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்கின்றனர். அவற்றில் ஒன்றுதான் முருங்கை கீரை சூப்.
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை – ஒரு கப்,
சின்ன வெங்காயம் – 2,
தக்காளி – ஒன்று,
பூண்டு – ஒரு பல்,
மிளகு – கால் டீஸ்பூன்,
தனியா, சீரகம் – தலா அரை டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
• வெங்காயம், தக்காளியை நறுக்கவும்.
• மிளகு, சீரகம், தனியாவை பொடி செய்து கொள்ளவும்.
• கடாயில் கீரை, வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு லேசாக வதக்கி, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பை ‘சிம்’மில் வைத்து அரைத்த விழுதுடன் மிளகு – சீரகப் பொடி, உப்பு சேர்த்து, தேவையான நீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கினால் முருங்கைக்கீரை சூப் தயார்!