Tuesday, May 23, 2023
HomeLifestyleHealthவெயிட்டா இருக்கோம்னு கவலைப்படுறீங்களா..? வரகு நெல்லி சாதத்தை சாப்பிட்டுகிட்டே வாங்க..! அப்புறம் பாருங்க

வெயிட்டா இருக்கோம்னு கவலைப்படுறீங்களா..? வரகு நெல்லி சாதத்தை சாப்பிட்டுகிட்டே வாங்க..! அப்புறம் பாருங்க

இன்று நம்மில் பலரும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கலாக மாறியிருப்பது உடல் எடை அதிகரிப்பது ஆகும். பலரும் உணவு கட்டுப்பாடு என்ற பெயரிலும் சரியாக சாப்பிடாமல் இருந்து ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொள்கின்றனர். இந்த நிலையில், உடல் எடையை குறைக்க நமது பாரம்பரிய உணவுமுறைகளை பின்பற்றி உடற்பயிற்சி செய்தாலே நாம் உடல் எடையை குறைக்கலாம்.

நமது பாரம்பரிய உணவுப்பயிர்களில் ஒன்றான வரகை பயன்படுத்தி செய்யப்படும் வரகு நெல்லிக்காய் சாதம் மூலம் உடல் எடையை வெகுவாக குறைக்கலாம்.

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வரகு நெல்லி சாதத்தை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

வரகு அரிசி – அரை கப்
பெரிய நெல்லிக்காய் – 3
கடுகு – ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – இரண்டு ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
பெருங்காயம் – சிறிதளவு
மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு
வர மிளகாய் – 1

செய்முறை

• முதலில் வரகு அரிசியை 20 நிமிடம் ஊறவைத்து நன்கு களைந்து கொள்ளவும்.
• பின் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதி வந்ததும் வரகு அரிசியினை அதில் சேர்த்து ஐந்து முதல் எட்டு நிமிடம் வேகவிடவும்.
• வரகு அரிசி நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து, நீரினை நன்கு வடித்து விடவும். இப்பொழுது வரகு சாதம் தயார்.
• இந்த வரகு சாதத்தினை ஒரு தட்டில் ஆறவைத்துக் கொள்ள வேண்டும்.
• பெரிய நெல்லிக்காயை கழுவி அதன் விதையை எடுத்து விட்டு, பொடியாகத் துருவிக் கொள்ள வேண்டும்.
• அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வர மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு நன்கு தாளிக்க வேண்டும்.
• அதனுடன் துருவிய நெல்லிக்காயைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
• சிறிது நேரம் வதங்கியவுடன் (இரண்டு அல்லது மூன்று நிமிடம்) அடுப்பிலிருந்து இறக்கி நெல்லிக்காய் கலவையை ஆற வைத்த வரகு சாதத்துடன் சோ்த்து கிளற வேண்டும். (வரகு சாதம் குழையாமல் கிளற வேண்டும்).
• இபோது சத்தான வரகு நெல்லிக்காய் சாதம் தயார். அனைவரும் சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சி அடையுங்கள்.

வரகு நெல்லிசாதத்தின் நன்மைகள்:

உடல் எடை குறைப்பு:

உடல் எடையை குறைக்க, ஒரு நல்ல ஆரோக்கியமான சத்தான உணவாக வரகு அரிசி இருக்கிறது. வரகு அரிசியில் மாவுச்சத்து குறைவாகவும், நார்ச்சத்து மிகுதியாகவும் உள்ளது. நார்ச்சத்து உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கிறது. வரகு அரிசியை இட்லி மற்றும் தோசை மாவுகளிலும் பயன்படுத்தலாம்.
அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். புரதச்சத்து, சர்க்கரை, மினரல்ஸ், கொழுப்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் வரகில் மிகுதியாக உள்ளது. வரகில் தாதுப்பொருட்களும் நிரம்பி உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன், உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும். வரகு அரிசியில் சாதாரண சாதம் முதல் பொங்கல், இட்லி, கஞ்சி, பிரியாணி, முறுக்கு, தட்டை என விதவிதமான பலகாரங்களை தயாரிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறுநீரக கற்கள் பிரச்சினைகள் நீங்கும்:

வரகு அரிசி கொண்டு செய்யப்படும் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் தாகம் தணிவதோடு, சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதை தடுக்கிறது. வரகு அரிசியை சாப்பிடுவதால் ரத்தத்தில் ஊட்டச்சத்துகள் அதிகரிக்கும். இது ரத்தத்தை தூய்மைப்படுத்துவதோடு, ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றது.

சிறுநீரின் வழியாக உடலின் நச்சுகள் அனைத்தையும் வெளியேற்றுகிறது. மேலும் சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் செய்கிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வரகு அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு, குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்.

வரகு அரிசியில் இருக்கும் சத்துக்கள் உடலில் ஏற்பட்டிருக்கும் புண்கள், வெட்டுக்காயங்கள், அதனால் ஏற்பட்ட தழும்புகள் போன்றவற்றை விரைவாக ஆற்றுகிறது. மேலும் பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது.