Monday, March 27, 2023
HomeLifestyleHealthஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினை உங்களுக்கு இருக்கிறதா? தீர்வுதான் என்ன..?

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினை உங்களுக்கு இருக்கிறதா? தீர்வுதான் என்ன..?

சமீபகால மாறி வரும் தூக்க நேரம், உணவுப்பழக்க வழக்கங்களால் பெண்களின் ஆரோக்கியம் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அவர்களின் மாதவிடாய் காலத்தில் அவர்கள் மிகவும் சிரமங்களை சந்திக்கின்றனர். மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்றதாக இருந்தால், உங்களுக்கு பி.சி.ஓ.டி., பி.சி.ஓ.எஸ். எனப்படும் சிரமங்களை பெண்கள் சந்திக்க நேரிடும்.

அறிகுறிகள்:

PCOS பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உடல்எடை அதிகரிப்பு, முகப்பரு, முடி உதிர்தல், ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைகளால் அவதிப்பட நேரிடும். சில உணவுப்பழக்கங்கள் மூலம் இந்த சிரமங்களை நாம் சரி செய்ய வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இந்த உணவுகள் உங்களின் தாமதமான மாதவிடாயை ஒழுங்கப்படுத்த உதவும்.

மஞ்சள்:

உங்கள் மாதவிடாய் சுழற்சியை சரியாக ஒழுங்கமைக்க விரும்பினால், மஞ்சளை வெவ்வேறு வழிகளில் உங்கள் அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்வது நல்லது. பாலில் மஞ்சள் கலந்து வெல்லம் சேர்த்துக் கஷாயம் தயாரித்து சக்தி வாய்ந்த பானமாகக் குடிக்கலாம்.

வைட்டமின் சி நிறைந்த பழங்கள்:

வைட்டமின் சி நிறைந்த பழங்களில் அஸ்கார்பிக் அமிலம் இருப்பதால் மாதவிடாயைத் தூண்டும் என்று கூறப்படுகிறது. ஆரஞ்சு, கிவி, எலுமிச்சை, ஸ்ட்ராபெரி மற்றும் நெல்லிக்காய் போன்ற பழங்கள் உங்களின் மாதவிடாயை ஒழுங்குபடுத்த உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இஞ்சி டீ:

மாதவிடாய் என்று வரும்போது இஞ்சி டீ பல அற்புதங்களை செய்யக்கூடும். இஞ்சியில் ஜிஞ்சரால் என்ற கலவை உள்ளது, இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் கருப்பைச் சுருக்கங்களுக்கு வழிவகுக்கிறது, இது மாதவிடாய் தொடங்குவதற்கு மேலும் உதவுகிறது. இஞ்சி தேநீர் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீரை 1 அங்குல நறுக்கிய இஞ்சியுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும். 3 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்கவும். ஒரு கோப்பையில் வடிகட்டி, தேன் சேர்த்து சூடாக இருக்கும்போது பருகவும்.

வெல்லம்:

வெல்லத்தில் போதுமான அளவு சோடியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இதை தொடர்ந்து உட்கொள்ளும் போது உங்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி சீராக வாய்ப்புள்ளது. வெல்லம் இயற்கையாகவே வெப்பத்தன்மைக் கொண்டது. உங்கள் தாமதமான மாதவிடாயை விரைவில் வர வைக்கும். வெல்லம், எள், பருப்பு ஆகியவற்றுடன் வெல்லம் சேர்த்து வெல்லம் லட்டு செய்து தினமும் சாப்பிடலாம்

வெந்தய நீர்:

வெந்தயம் மிகவும் பயனுள்ள ஒரு பொருள். வெந்தயத்தின் அதிகபட்ச நன்மைகளைப் பெற, வெந்தய விதைகளை ஊற வைத்த தண்ணீரை தினமும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் குடிக்கவும். 1 டீஸ்பூன் வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வடிகட்டவும். அதை சூடாக்கி, காலையில் வெறும் வயிற்றில் அருந்துங்கள். இது உங்கள் தாமதமான மாதவிடாயை விரைவில் தூண்டும்.

இந்த முறைகள் மட்டுமின்றி தொடர்ந்து மாதவிடாய் பிரச்சினைகள் இருந்து கொண்டே இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது ஆகும்.