நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சத்தான உணவுகள் எந்தளவிற்கு தேவையோ அந்தளவிற்கு உடற்பயிற்சியும் அவசியம் ஆகும். இன்றைய சூழலில் பலருக்கும் வேலைக்கு செல்வதிலே நேரம் சென்றுவிடுவதால் அவர்களுக்கு உடற்பயிற்சி செய்வதற்கு போதிய நேரம் கிட்டுவதில்லை.
இதனால், பலரும் இரவு நேரங்களில் உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர். இது நன்மையா? ஆரோக்கியமானதா? என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. குளிர்காலத்தில் காலையில் உடற்பயிற்சி செய்யும் போது அதிகமாக மெனக்கெட வேண்டும். உடலும் இறுக்கமாக காணப்படும். இப்படி காலையில் உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் ஆற்றல் இழப்பை விட, மாலை, இரவு வேளைகளில் உடற்பயிற்சி செய்யும் போது ஆற்றல் இழப்பு குறையும். அதனால் உடற்பயிற்சிக்கு ஏற்றதே மாலை, இரவு வேளைகள் தான்.
இரவில் உடற்பயிற்சி மேற்கொள்வதால் தூக்கமின்மை பிரச்சனை சரியாகும். மன அழுத்தம் குறைந்து நிம்மதியாக இருந்தால் உடலை எடையை குறைப்பது விரைவாகும். அதனால் இரவு, மாலை வேளைகளில் கூட உடற்பயிற்சிகளை செய்து பலன் பெறுங்கள்.
மாலை வேளைக்கு பிறகு நம்முடைய தசையின் உணர்திறன் அதிகமாக இருக்கும். அப்போது உடற்பயிற்சி மேற்கொண்டால் தசைகளின் வலிமை அதிகமாகும். இரவில் உடற்பயிற்சி செய்துவிட்டு உறங்கச் செல்வதால், புரதச்சத்து நன்கு உறிஞ்சப்படுகிறது. இதனால் தசைகள் உறுதியாகும்.
இரவு நேரத்தில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் உற்சாகம் கிடைக்கும். நிம்மதியான உறக்கத்திற்கு இரவில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். மாலை, இரவு நேரங்களில் உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும். இரவில் உடற்பயிற்சி செய்யும் போது மனநிலையை மேம்படுத்தும். இதனால் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஹார்மோன்களில் ஒன்றான நமது உடலில் சுரக்கும் எண்டோர்பின்கள் அதிகமாகிறது.
உடற்பயிற்சி ஆரோக்கியமானதுதான் என்றாலும் நாம் எந்தமாதிரி உடற்பயிற்சி செய்கிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சில நேரங்களில் கடினமான உடற்பயிற்சி மேற்கொள்வது நமது ஆரோக்கியத்திற்கு தீங்காகவும் அமையலாம். அதனால், போதுமான அளவு உடற்பயிற்சியும், அதற்கேற்றாற்போல உணவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ALSO READ | தும்மல் வராமல் தடுப்பது எப்படி? என்ன செய்ய வேண்டும்?